பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 ♦ என் அமெரிக்கப் பயணம்


(ஆ) சுமார் 30 வயதுள்ள ஒரு பெண்மணி சாலையில் எங்காவது சிறு காகிதத்துண்டு கிடைத்தாலும் அதனைப் பொறுப்புடன் எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுக் கொண்டு வந்தாள். இது எனக்கு வியப்பாக இருந்தது. இவளைப்பற்றி என் மருமகளிடம் கேட்டேன். பனிக்கட்டி இருக்கும் போது கூடத் தவறாமல் இப்பணி இதுவரை ஒராண்டுக் காலமாகச் செய்து வருவதாகத் தெரிவித்தாள். இப்படித் தொண்டு புரிபவர்களும் உலகில் உள்ளனர். இது வியப்பான செய்தி என்று எனக்குப்பட்டது. ஆதலால் இதனை ஈண்டுப் பதிவு செய்து வைத்தேன். தன்னலம் சிறுதுமின்றி பொதுத் தொண்டில் எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றிப் பணியாற்றி வரும் இந்த பெண்மணியை பெரிய புராணத்து அடியார்களுடன் ஒப்பிட்டு நோக்கலாம் என்பது அடியேனின் கருத்து.

8. சிலவீடுகளில் தேசியக் கொடிகள்: என் மகன் வீட்டில் நியூயார்க்கில் இருந்தபோது பல இடங்களைச் சுற்றிப் பார்த்த போது சில இல்லங்களில் மட்டும் தேசியக் கொடிகள் பறப்பதைக் கண்டேன். காரணம் கேட்டதற்கு “பின்லேடன் உலக வாணிக மையத்தை தாக்கியதைக் கண்ட சில தேச பக்தர்கள், தம் வீடுகளில் இக்கொடியை ஏற்றி வைப்பது தம் தேசபக்தியை வெளியிடுவதற்கு அறிகுறி” என்று தெரிவித்தான் என் மகன் டாக்டர் இராமகிருஷ்ணன்.

டாலஸ்ஸில் என் பேத்தி இல்லத்தில் தங்கியிருந்தபோது, அங்குப் பல இடங்களைச் சுற்றிப் பார்த்த நிலையில் பல இல்லங்களில் ‘தேசியக் கொடி’ பறப்பது என் கண்ணில்பட்டது. காரணம் கேட்டபோது, “பின்லேடனால் உலக வாணிக மையம் அழிக்கப்பட்ட நிலையில் சில அமெரிக்கமக்கள் இஸ்லாமியர்களின் இல்லங்களைத் தாக்க முயன்றனர். அப்போது “இஸ்லாமியர்களும் தேசியக் கொடியைத் தம் வீடுகளில் பறக்கவிட்டுத் தம் ‘தேச பக்தியை’ வெளியிட்டனர்” என்று சொன்னாள் என் பேத்தி மிருணாளினி.

இஃது அமெரிக்காவில் தேச பக்தியின் நிலை!

2. சாலைகள்

சாலை அமைப்புதான் என்னை மிகவும் கவர்ந்தது. மிக அகலமானதெரு[1] (100 அடிக்குச் சற்றுக் குறைவு), 72 அடி அகலமான தெரு[2] (60 அடி அகலம் உள்ள தெரு[3], அடுத்தது 40 அடி அகலமுள்ள தெரு[4], இங்ஙனம் சாலைப்பிரிவுகள் அமைந்துள்ளன. எங்கும் பள்ளமோ படுகுழியோ


  1. Boulevard
  2. Avenue - நம் ஊரில் இது நிழற்சாலை
  3. Street
  4. Drive