பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொதுச் செய்திகள் ♦ 9

மருந்துக்கும் காணப்பெறா. எல்லாம் தார் சாலைகள் தாம். எழுதும் கற்பலகை போல் மிகச் சமமாக அமைந்துள்ளன. சாலைக்கு இருபுறமும், வெள்ளைச் சீமைக்காரையாலான[1] நடைபாதை அமைப்பு ‘பளிச்’ என்று கண்ணில்படும். ஊரிலுள்ள சாலைகள் இங்ஙனம் அமைந்திருந்தன. போவதற்கும் வருவதற்குமாக இரு பிரிவுகளும், அவற்றில் தனித்தனியாக இரு கால்வாய்களும்[2] இருக்கின்றன. உலகிலேயே எங்கும் இராத அளவு பல கோடி அளவு கார்களின் பெருக்கம் இங்குள்ளமையால் சாலைகள் இங்ஙனம் கவனிக்கப் பெறுகின்றன போலும்.

1. பராமரிப்பு: சாலை பராமரிப்பு சொல்லுந் தரமன்று. வாரம் 2 நாட்கள் குப்பை சேகரிக்கப் பெறுகின்றது. இல்லத்திலுள்ளோர் சமையலறைக் குப்பையை தனியாக ஒரு பிளாஸ்டிக் கூடையிலும், தாள்கள் அமைந்த குப்பையை மற்றொரு பிளாஸ்டிக் கூடையிலும் சாலையோரம் நடைபாதை அருகே வைத்திருப்பர். இவற்றைச் சேகரிக்கும் வண்டிகள் இவற்றைத் தனித்தனியாகச் சேகரித்துச் செல்லும். தவிர கண்ணாடித்துண்டுகள், பிளாஸ்டிக் துண்டுகள் பைகள், தகரம் முதலியவற்றைத் தனியாகச் சேகரித்து அவற்றைத்திரும்பவும் புதிய பொருள்களாக மாற்றியமைக்கும்முறையும் உண்டு.

2. நெடுந்தொலைவு சாலைகள்: இவற்றின் அமைப்பும் சிறப்பாக உள்ளது. இங்கு நடைபாதை அமைப்பு இல்லை. இங்கும் போவதற்கு ஒரு பிரிவும் வருவதற்கு ஒரு பிரிவுமாக இருபிரிவுகள் உள்ளன. இரண்டு பிரிவுகளிலும் கால்வாய் அமைப்புகளும் உள்ளன. இங்கும் பள்ளமோ, படுகுழியோ எங்கும் இல்லை. சாலையின் ஒரங்களில் கார் செல்லக் கூடிய வேகங்களைக் குறிப்பிட்டுக் காட்டும் பெயர்ப் பலகைகள் உள்ளன. நெடுஞ்சாலையைக் குறுக்குச் சாலைகள் வெட்டும் பகுதிகள் வரும் இடங்களில் மணிக்கு 15 கல் வேகத்திற்குமேல் இல்லை. பிற இடங்களில் மணிக்கு 20, 25, 30, 40, 50, 65 (இதற்கு மேல் இல்லை) கல் தொலைவுகள் என்று குறிப்பிட்டுள்ள பெயர்ப் பலகைகள் தவறாமல் இருக்கும்.

சாலைகளில் கார்கள் இவற்றைக் கவனித்துச் செல்லுகின்றனவா, அதிவேகத்தில் செல்கின்றனவா என்பதைக் கண்காணிக்க ராடார்[3] அமைப்பைக் கொண்ட வண்டிகளில் காவலர்கள் ரோந்து வருவார்கள். மீறிச் செல்பவரின் வேகம் ராடாரில் பதிந்து கொள்ளுமாதலால் அந்த வண்டியை மடிக்கிப் பிடித்து விசாரணை நடத்துவார்கள். வண்டியோட்டியின் உரிமம்[4], வண்டியின் உரிமம், வண்டியோட்டியின் ஒளிப்படம்[5] முதலியன சோதிக்கப்பெறும். உரிய வேகத்திற்கு மேல், வேக அதிகரிப்பிற்கேற்ப


  1. White Cement
  2. Chanels
  3. Radar
  4. License
  5. Photo