பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 ♦ என் அமெரிக்கப் பயணம்

இந்தப் பெருமாட்டியைச் சேவித்த நிலையில் திருவரங்கத்துப் பெருமானின் திவ்விய மங்கள விக்கிரகம் (திருமேனி) சுவரில் தீட்டப்பெற்றிருப்பது நம் கவனத்தை ஈர்க்கின்றது. உடனே,

பண்டை நான்மறையும், வேள்வியும் கேள்விப்
       பதங்களும், பதங்களின் பொருளும்,
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்
       பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல்மா ருதமும், குரைகடல் ஏழும்
       ஏழுமா மலைகளும், விசும்பும்,
அண்டமும் தானாய் நின்றஎம் பெருமான்

       அரங்கமா நகர் அமர்ந் தானே - பெரி.திரு. 3.9:1

என்ற பாசுரம் நம் மனத்தில் குமிழியிட்ட வண்ணம் அப்பெருமானை வணங்கி மகிழ்கின்றோம்.

அடுத்து நடராசர் சந்நிதிக்கு வருகின்றோம். வள்ளலார் பாடல் மனத்தில் எழுகின்றது.

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
       குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைதண் ணீரே
       உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
       மென்காற்றில் விளைசுகமே சுகத்தில் உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
       ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே

              - ஆறாம் திருமுறை-அருள்விளக்க மாலை-2

என்ற பாடலை மனத்தினுள் மெதுவாக ஓதி உளங்கரைந்து உருகுகின்றோம். இசையரசி கொடுமுடி சுந்தராம்பாள் இசையொலியும் நம் காதில் ரீங்காரம் இடுகின்றது. அடுத்து காமாட்சியம்மையின் சந்நிதி நம்மை ஈர்க்கின்றது. அப்பெருமாட்டியை வழிபட வள்ளற் பெருமான் கை கொடுத்துதவுகின்றார்.

அரங்காய மனமாயை அளக்கர் ஆழம்
       அறியாமல் கால் இட்டு இங்கு அழுந்து கின்றேன்
இரங்காயோ சிறிதும் உயிர் இரக்கம் இல்லா

       என்மனமோ நின்மனமும் இறைவி உன் தன்