பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 ♦ என் அமெரிக்கப் பயணம்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன்வெள்ளி
      சனிபாம்பு இரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
     அடியா ரவர்க்கு மிகவே

- சம்.தே. 2.85:1

என்ற பாடலை ஓதி நவகோள்களையும் வழிபடுகின்றோம்.

சிறிது நேரம் திருக்கோயிலில் அமர்ந்து தெய்வ சிந்தனையுடன் அமைதியாக இருந்து இல்லம் திரும்புகின்றோம். நியுயார்க்கில் தங்கியிருந்தபோது அண்மையிலுள்ளது இத்திருக்கோயிலே யாதலால் பலதடவைகள் இங்கு வந்து வழிபட வாய்ப்புகள் நேரிடுகின்றன.

இரண்டாம் முறை: ஏப்ரல்-13 யுகாதி (தெலுங்கு வருடப் பிறப்பன்று)யன்று இந்தத் திருக்கோயிலுக்குச் சென்று வந்தோம். மாலை 4.30 மணிக்குப் புறப்பட்டோம். பேருந்து நிற்குமிடத்திற்கே ஒரு பர்லாங் நடக்க வேண்டும்; திருக்கோயிலருகே பேருந்து நிற்குமிடத்திலிருந்து மீண்டும் அரை ஃபர்லாங் நடை கட்டவேண்டும்.

கோயிலருகில் வெளிப்புறமாக ஓர் ஓரத்தில் மிதியடிகள் வைக்கும் இடம் உள்ளது. மரச்சட்டங்களாலமைந்த பல அறைகளுடன் கூடிய அமைப்பு இது. இதில் அடையாளமாக நம் மிதியடிகளை வைத்துச் செல்ல வேண்டும். வைத்துவிட்டுத் திரும்பும் போது திருக்கோயிலுக்கு அடியில் (சுரங்கத்தில்) செல்லும் வாசல் ஒன்று தென்பட்டது. என்ன என்று வினவிய போது அங்கு ஒரு பெரிய மண்டபம் ஒன்று இருப்பதாகவும் திருமணம் முதலியவை நடைபெறுவதற்கும் சமயக் கூட்டம் நடைபெறுவதற்கும் அதனைப் பயன்படுத்துவர் என்றும் கூறினர். நாங்கள் உள்ளே சென்று அதனைப் பார்க்கவில்லை.

நிதானமாக அமைதியாகப் பார்த்ததால் மனமகிழ்ச்சி. சேவையும் மிகச்சிறப்பாக நடைபெற்று விநாயகருக்கும் ஏழுமலையானுக்கும் அர்ச்சனை செய்வித்தோம். ஏனைய கடவுளரையும் நிதானமாகச் சேவித்து மகிழ்ந்தோம்.

இங்கு அர்ச்சகர் தேங்காய் உடைப்பதில்லை. தேங்காய் உடைப்பதற்கென்றே ஒரு தனியான இடம், அங்குத் தேங்காய்கள் குவியலாக வைக்கப் பெற்றுவிட்டு நாமே அதனையுடைத்து அர்ச்சனைக்காக வாங்கின பழம், ஊதுவத்தி, கர்ப்பூரம் அடங்கியதட்டில் தேங்காய் மூடிகளையும் போட்டுத் தந்து விட வேண்டும். அர்ச்சனை முடிந்தவுடன் தட்டு பொருள்களுடன் நம்மிடம் வந்து சேர்ந்துவிடும்.