பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 ♦ என் அமெரிக்கப் பயணம்

இராமாநுச நூற்றந்தாதி என்ற பிரபந்தத்தையும், நம்மாழ்வார்மீது மதுரகவிகள் பாடிய கண்ணிநுண் சிறுத்தாம்பை நாலாயிரத்துடன் சேர்த்ததுபோல் அமுதனார் அருளிய பிரபந்தமும் நாலாயிரத்துடன் சேர்த்துக் கொள்ளப் பெற்றது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தொகுக்கப்பெற்ற வரலாறு இத்துடன் நிறைவு பெறுகின்றது.

2. திருநாரையூர்: இத்தலமும் கோயிலுக்கு மேற்கே சுமார் பத்துக் கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இங்கு சுயம்புவாக எழுந்தருளியுள்ள பொல்லாப் பிள்ளையார் என்ற திருநாமம் கொண்ட விநாயகப் பெருமானை அந்தணர் ஒருவர் வழிபட்டு வந்தார். அவருக்கு நம்பியாண்டார் நம்பி என்ற ஒரு மகன் உண்டு. நம்பியாண்டார் நம்பி சிறுவனாக இருந்த பொழுது ஒரு சமயம் தந்தையாருக்கு ஒரு சில நாட்கள் ஓர் அலுவல் நிமித்தமாக வேற்றுார் செல்ல நேர்ந்தது. சிறுவனிடம் பிள்ளையார் வழிபாட்டுப் பொறுப்பை விட்டுச் சென்றார்.

சிறுவன் நம்பி அன்னையார் தயாரித்த கொழுக்கட்டைகளை வைத்து நைவேத்தியம் செய்தார்; கொழுக்கட்டைகளை உண்ணுமாறு விநாயகரை வேண்டினார். அர்ச்சைநிலையிலுள்ள பிள்ளையார் அசையவில்லை. சிறுவன் பிள்ளையாரை நோக்கி, “பிள்ளையாரே, இவற்றை நீ சாப்பிடாவிட்டால் நானும் உண்ணாவிரதம்” என்று கூறி சண்டித்தனம் செய்யவே, பிள்ளையாரும் தமது அர்ச்சை சமாதியைக் கடந்து உண்மை விநாயகராகி தும்பிக்கையால் அனைத்துக் கொழுக்கட்டைகளையும் வாங்கி வாயினுள் செலுத்தி உண்டுவிட்டார். சிறுவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அம்மகிழ்ச்சிப் பெருக்கோடு சிறுவன் வீடு திரும்பினான்.

அன்னையார் “கொழுக்கட்டைகள் எங்கே?’” என்று கேட்க, மைந்தன் “பிள்ளையார் தின்று விட்டார்” என்று மறுமொழி பகர்ந்தவுடன் அன்னையாரால் இவன் சொல்லை நம்ப முடியவில்லை. “நீ நம்பாவிட்டால், நாளை வந்து நீயே பார்” என்று சொல்லிவிட்டான் அந்த அருமைச் சிறுவன். அடுத்த நாள் அன்னையார் தம் அருமை மைந்தன் செய்த பிள்ளையார் வழிபாட்டை மறைந்திருந்து கவனித்தார். பிள்ளையார் கொழுக்கட்டை தின்றதை “கண்ணாலேயே” பார்த்துவிட்டார். சொல்லற்கரிய வியப்பெய்தினார். இச்செய்தி விரைவில் எங்கும் பரவியது. ஊர்மக்களெல்லாம் சிறுவனின் பிள்ளையார் வழிபாட்டை மெச்சினர்; பாராட்டி மகிழ்ந்தனர்.

சிறுவன் பிள்ளையாரை நோக்கி “பிள்ளையாரே, சிலநாட்கள் பள்ளிக் கூடம் போகாமையால், வாத்தியார் அடிப்பார். இனி நான் பள்ளி போகேன். நீ தான் எனக்குப் பாடம் புகட்ட வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான்.