பக்கம்:என் சுயசரிதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

விவரமாய் எழுத விரும்புகிறேன். முதல் இரண்டு வருஷம் என் வக்கீல் வரும்படி சராசரியாக மாதத்திற்கு 50 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை இருந்தது. பிறகு உயர்ந்து கொண்டு போய் சுமார் 1000 ரூபாய் சம்பாதித்தேன். இருந்தபோதிலும் நான் வக்கீலாக பெரும் பதவியையாவது ஊதியத்தையாவது பெறவில்லை என்று ஒப்புக்கொள்ளவேண்டும். இதற்கு முக்கிய காரணம் வக்கீல் உத்தியோகத்தில் என் மனம் பலமாக ஈடுபாடாததேயாம். பெரிய வக்கீல் என்று பெயர் எடுத்து ஏராளமாக பணம் சம்பாதிக்க வேண்டுமென்று நான் விரும்ப வில்லை. வெளிப்படையாகக் கூறுமிடத்து என் மன உற்சாக மெல்லாம் தமிழ் நாடகங்களில் நடித்தும், தமிழ் நாடகங்களை எழுதியும் பெரிய பெயர் எடுக்கவேண்டுமென்றே இருந்தது! இதன் பொருட்டு என் ஓய்வு காலத்தையெல்லாம் லா புஸ்தகங் களையும் லா ரிபோர்ட்களையும் படிப்பதில் செலவிடாது சுகுண விலாச சபைக்காக உழைப்பதிலேயே செலவழித்தேன். இதற்காக நான் எப்பொழுதும் வருத்தப்பட்டவனன்று. இப் பொழுதும் வருத்தப்படவில்லை; சந்தோஷமே படுகிறேன். நான் கொஞ்சம் பிரபல நடிகனும் நாடக ஆசிரியனுமான பிறகு ஒரு நாள் ஆந்திர நாடகப் பிதா மகனான பல்லாரி V. கிருஷ்ணமாச்சார்லு அவர்கள் தன்னுடைய அனுபவத்தை எனக்குத் தெரிவித்து “நீ சிறந்த வக்கீலாக வேண்டுமென்றால் நாடகத்தைத் தூரத்தில் விட்டுவிட வேண்டும்” என்று போதித்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. அவரது போதனையை நான் ஒப்புக்கொள்ள வில்லை என்று எழுதவேண்டியது அநாவசியம்’

நான் வக்கீலாக பணம் சம்பாதிக்கும் போது, என் இல் வாழ்க்கை சுகமாய் நடத்தவும், என் நாடகங்களை அச்சிட வேண்டியதற்கும் போதுமான பொருள் கிடைத்தால் போதும் என்று உழைத்துவந்தேன். மேற்சொன்ன காரணங்கள் பற்றியே கூடுமான வரையில் எனது வக்கீல் வேலையையெல்லாம் சுகமாய்க் காலம் கழிக்கக் கூடிய ஸ்மால்காஸ் கோர்ட்டில் பெரும்பாலும் சிடிசிவில் கோர்ட்டில் சில பாகமும் போலீஸ் கோர்ட்டில் சில பாகமும் வைத்துக்கொண்டேன். எப்பொழுதாவது கஷ்டப்பட்டு உழைக்கவேண்டிய பெரிய வியாஜ்யங்கள் வந்தால் அவைகளை மெல்ல, எனக்கு அவகாசமில்லை’ என்று தட்டிவிடுவேன்.

இக்காரணம் பற்றியே கட்சிக்காரர்கள் என்னிடம் வருவதென்றால் காலை 9½ மணிக்குள் வரவேண்டும் என்றும் சாயங் காலங்களில் 5 மணிக்குமேல் ஒருவரும் வரக்கூடாது என்றும் ஒரு நிபந்தனை செய்து கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/32&oldid=1112831" இலிருந்து மீள்விக்கப்பட்டது