பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

101

கனிகள் இருக்கவும். இன்னாத காய்களைத் தேடித், தின்பதற்கு நிகராம் என நினைந்து, இனிய சொற்களையே தேர்ந்தெடுத்து வழங்கினார்கள்.

இனிக்கப் பேசி இறவாப் பெருநிலை வாழவேண்டும் ஏன்று விரும்பிய தமிழர்க்கு, அவர் வழங்கும் மொழியும் பெருந்துணை புரிந்தது. இனியவே வழங்கிய அவர்களின் மொழியும், முழுக்க முழுக்க இனிக்கும் ஒலிகளினாலேயே உருவாகித் திகழ்ந்தது. ங், ஞ், ந், ண், ம்,ன், போலும் மெல்லொலிக் கலப்பால், தமிழ்மொழி உருவாகத் துணைபுரியும் சொற்களனைத்தும், இன்னொலியுடையவாகவே ஒலித்தன. அதனால், தமிழ்மொழி இனிமை வாய்ந்து திகழ்கிறது.

செந்தமிழ் இலக்கியங்கள்

செந்தமிழ் இலக்கியங்களின் சிறப்பு, அவ்விலக்கியச் செல்வங்களைத் தம் அழியாப் பெருநிதியாகப் படைத்த தமிழ் மக்கள் பெற்றிருந்த பெருஞ்சிறப்பின் விளைவாகும். கரும்பு களர் நிலத்தில் விளையாது: இனிய கருத்தும் இனிக்கும் சொற்களும், தீயொழுக்கம் உடையார்பால் தோன்றுவது இயலாது; உள்ளத்தின் ஒளியே உரையில் புலப்படும். ஆகவே, துய உள்ளம் உடையாரிடத்து மட்டுமே தூய சொற்கள் தோன்றும்; அவர் செயலே தூய்மையில் தோய்ந்து திகழும். ஆகவே, இனியவை உரைக்கும் நாநலம் உடையார், இயல்பாலும் இனியரே ஆவர்.

தமிழ், இனிமைப் பண்பில் தலைசிறந்து விளங்குகிறது என்றால், அம்மொழிக்கு உரியோராகிய தமிழர் தலை சிறந்த நாகரிகம் வாய்க்கப் பெற்றவராதல் வேண்டும், இது உண்மையென்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும்.