பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

103

தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்ற வரிசைகளில் தொகுத்து நமக்களித்துச் சென்றனர்.

அரசு நிலையாலும். பொருள் நிலையாலும் பண்டுதான் பெற்றிருந்த சீரும் சிறப்பும் இழந்து இழிநிலையுற்றிருக்கும் இக்காலத்திலும், தமிழரும் தமிழகமும் உலக மன்றத்தில் உயர்வாக மதிக்கப்பெறுவதற்கு தமிழ்மொழி பெற்றிருக்கும்,

தாழாத் தனிச் சிறப்பு வாய்ந்த பழம் பெரும் இலக்கியச் செல்வங்களே காரணமாகும். ஒல்காப் புகழ் கொண்ட தொல்காப்பியம் உடையது எங்கள் தமிழ்; எட்டுத்தொகை உடைமையால் ஈடிலாப் புகழ் கொண்டது எங்கள் தமிழ்; பத்துப் பாட்டால் பாரோர் புகழ் கொண்டது எங்கள் பைந்தமிழ்; வள்ளுவர் வழங்கிய வான் குறள் உடையது எங்கள் தமிழ்; நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரங் கொண்டது எங்கள் தமிழ்; முச்சங்கம் கண்டது எங்கள் தமிழ்: இயல் உடையது; இசை உடையது இனிய கூத்துடையது எங்கள் தமிழ் என்றெல்லாம் இன்று பெருமை பாராட்டுகிறோம் நாம்.

அப்பெருமையை இன்று நாம் அடைய, அன்று அவற்றை ஆக்கி அளித்தார்கள் புலவர் பெருமக்கள் பல்லோர்; அப் புலவர்கள் ஆன்றவிந்தடங்கிய அறிவுடையராய் அருந்தமிழ்ப் பாக்களை ஆக்கி அளித்த அப்பணியினை, அன்று மேற்கொண்டமையினாலேயே, இன்று நாம் பெருமை கொள்கிறோம்; அவர்கள் அருந்தமிழ்ப் பாக்களை அளிக்கும் அப்பணியைக் கைவிட்டு, எல்லோரையும் போன்று, தம் வயிற்று வாழ்விற்கானவே தேடி அலையும் அப்பணியை மேற்கொண்டிருப்பரேல் அன்று அருந்தமிழ்ப் பாக்கள் தோன்றியிரா இன்று நாமும் பெருமை கொண்டிருத்தல் இயலாது.