பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

என் தமிழ்ப்பணி


அப்புலவர் பெருமக்கள் தம் வாழ்விற்காம் வகை தேடி உழலாது அமிழ்தினும் இனிய அருந்தமிழ்ப் பாக்களைப் பாடிக் கிடக்கும் பணியினராக அன்று வழி செய்து தத்தவர்; அன்று நாடாண்ட அரசர்களும், அவ்வரசர்களே போலும் சீருடைச் செல்வர் சிலருமே யாவர். அவர்கள், அப்புலவர்கள் வேண்டும் போதெல்லாம், வேண்டிய பொருளை விரும்பி அளித்து வந்தனர்.

அரசரும் பிறரும் பொருள் அளித்துப் பேணிப் புரந்தமையால், புலவர்கள் பொருள் தேடியலையும் பணியற்றவராயினர்; வாழ்வு பற்றிய கவலை அவர்க்கு இலதாயிற்று; அதனால் அவர்கள் உள்ளத்தே அமைதி நீலவிற்று; அவ்வமைதி நிறைந்த உள்ளத்தோடு உலகத்தை ஊன்றி ஊன்றி நோக்கினார்கள்; உலகம் அவர் உள்ளத்தே உருப்பெற்றது; ஆண்டு உருப் பெற்ற உலகம், அவர் உரையில் இடம் பெற்றது; உயிரோவியமாக வெளிப் போந்தது; உலகியல் உணர்த்தும் பாக்கள் பலப்பல உண்டாயின.

ஆகவே, அரிய பாக்களைப் பாடி அன்று மொழி வளர்த்தவர், அவ் அருந்தமிழ்ப் புலவர்களும் அப்புலவர்களுக்கு பொருள் அளித்துப் பேணிய புரவலர்களும் ஆவர்.

தமிழ்நாடு

உலக அரங்கில், தமிழ்நாடு உயர்ந்து விளங்கிய காலம் ஒன்று இருந்தது: உலகத்தார்க்கெல்லாம், அறுசுவை உணவளித்து அவர் உடலை ஓம்பியும், ஆன்ற அறிவளித்து, அவர் உயிரை ஓம்பியும் உயர்வுற்ற காலம் அது. உலக நாடுகள் அனைத்திலும் அறிவில், ஆற்றலில், செல்வத்தில் செழுமையில், பொன்னில், பொருளில், நாகரீக நற்பண்பில் நனி சிறந்தது எங்கள் நாடு என்று, இன்று பெருமை கொள்ளும் நாடுகள், உலக மக்கள், தங்கள் உணர்வாலும்