பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

107

சிறப்புக்களையும். அவ்வரசர்களின் ஆற்றற் பெருமைகளையும் பாராட்டிக் கூறுகின்றன; என்னே தமிழ்நாட்டின் தொன்மை! என்னே தமிழரசர் தம் பெருமை!

தமிழ்நாடு வயல் வளத்திலும், வாணிக வளத்திலும், சிறந்து, உலக அரங்கின் உயர்ந்த இடத்தில் அமரப் பெருந்துணை புரிந்தவர், அத்தமிழ்நாட்டை, அன்று ஆண்டிருந்த முடியுடை மூவேந்தர்களே என்றாலும், அத்தமிழ்நாடு இன்று தாழந்த நாடாய் தளர்ந்து போனமைக்கும் அவர்களே காரணமாவர்.

மூவேந்தர்கள் மொழியை முன் நிறுத்தி ஒற்றுமை உள்ளம் கொண்டு உலகாள்வதற்கு மாறாக, சேரர், சோழர், பாண்டியர் என்ற குலப் பெருமையே குறிக்கோளாய் ஒற்றுமை குலைத்து வேற்றுமையை வளர்த்து வந்தனர். மூவேந்தர் குலத்தில் பிறந்த ஒவ்வொருவரும், பிறரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடே பிறந்தனர். ஒரு குலத்தில், ஒரு காலத்தில், ஆற்றல் மிக்க அரசன் ஒருவன் பிறந்து விட்டால், அவன் பிற இரு குலத்து அரசர்களையும் வென்று அடக்கி, அரசர்க்கு அரசனாய் வாழ ஆசை கொள்வதும், அவன் பெருமை கண்டு மனம் பொறுக்க மாட்டாத பிற இரு குலத்து அரசர்களும் ஒன்று. பட்டுக் குறுநிலத் தலைவர்களின் துணையையும் பெற்று, அவனோடு சமர் புரிந்து அவனை அழிக்க முனைவதும், அக் கால அரசியலின் அழிக்க முடியாத வழக்கங்களாகி விட்டன.

அம்மட்டோ? ஒரு குலத்தவர், பிற குலத்தவரோடு போரிட்ட நிலையோடு நின்று விடவில்லை. ஒரு குலத்தில் பிறந்தவர்களுக்குள்ளேயே ஒருவர் ஒருவரோடு போரிட்டுக் கொள்ளவும், மகன் தந்தை மீது போருக்கு எழவும், தந்தை தான் பெற்ற மகனையே போரிட்டு அழிக்கவும், அக்காலத் தமிழரசர்கள் உரிமை பெற்றிருந்தனர்.