பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

111


அப்பெண்ணின் துயர்நிலை கண்டு வருந்திய தோழி. இனி வாய்மூடி வாளாய்க் கிடத்தல் கூடாது; இவள் துயர் தீர்க்கும் வழி வகைகளை இன்றே செய்தல் வேண்டும்; இவளை மறந்து வாழும் இவள் கணவனை இன்றே இவள் பால் சேர்த்தல் வேண்டும் எனத் துணிந்தாள்: அப்பெண்ணின் துயர் காணப் பொறாமையால் அவள் அத்துணிவு கொண்டாளாயினும், பரத்தையர் சேரிக்குச் சென்று, இளைஞனுக்கு இவள் நிலையை எடுத்துக்கூறி அழைத்து வருவது எவ்வாறு? அதைச் செய்ய வல்லவர் யார்? பண்புடையார் எவரும் பரத்தையர் சேரிபுக மனம் இசையாரே என்ற கவலை எழச் செய்வதறியாது செயலற்றுக் கிடந்தாள்.

அப்போது அத்தெரு வழியே பாணன் செல்வதைக் கண்டாள்; இளைஞன் விரும்பும் பரத்தையரைத் தேர்ந்து அவளுக்கும் அவனுக்கும் உறவுண்டாக்கப் பெருந்துணை புரிந்தவன் அப்பாணன்: இளைஞனுக்குப் பரத்தையர் ஒழுக்கத்தைக் கற்பித்தவனும் அவனே: அதனால் அவனைக் கண்ணுற்றதும் அவன் பால் பெருஞ்சினம் கொண்டாள்; ஆனால் அந்நிலையில் தாக்குத் துணைபுரிவன் அவன் ஒருவனே; பரத்தைய சேரிக்குச் செல்லப் பக்குவப் பட்டவன் அவன் ஒருவனே என உணர்ந்து, உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கிய சினத்தைத் தனக்குள்ளே அடக்கிக் கொண்டாள். தெருவழியே சென்று கொண்டிருந்த அவனை அழைத்தாள்.

“பாண! பாராட்டத்தக்க பெருமை மிக்க, நம் தலைவன் பரத்தையர் சேரி புகுந்து வாழ்கிறான்; பரத்தையர் பால் கொண்டுள்ள ஆசை மிகுதியால் அவன் மனைவியாம் மாண்புடைய இவளை அறவே மறந்து விட்டான்: இன்று இவளை மறந்து வாழும் அவன், அன்று இவள்பால் எத்துணைப் பேரன்பு கொண்டிருந்தான் தெரியுமா? இவள் காதலைப் பெற அவன் எத்துணை அடும்பாடு