பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10

என் தமிழ்ப்பணி

அவர் இடத்திற்குக் காவேரிப்பாக்கம் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்திருக்க திரு. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் வந்து சேர்ந்தார். தென் ஆர்க்காடு மாவட்டம். மயிலத்துக்கு மேற்கில் பத்து கி. மீ. தொலைவில் உள்ள ஒளவையார் குப்பம் என்ற ஊரில், அவ்வூர்க் கணக்கு எழுதி வந்த திரு. சுந்தரம்பிள்ளை அவர்களின் மகனாகப் பிறந்தமையால் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை என அழைக்கப்பட்டவர்.

மகாவித்துவான் வீரபத்திரப் பிள்ளை அவர்கள் எங்கே, இவர் எங்கே, எனச் சில நாள் இவரை மதிக்காமலே இருந்த மாணவர்களில் நானும் ஒருவன். ஆனால் ஒளவை அவர்களின் பாடம் நடத்தும் முறை புதுமையானது. அன்று நடத்த வேண்டிய பாடத்திற்கான குறிப்புகளை முன்பாகவே தேர்வு கொண்டல்லது பாடம் எடுக்கமாட்டார்; பாக்களை இசையோடு பாடுவார்; சொல் பிரித்து பொருள் விளங்கப் பாடுவார்; புதிய பாடம் எடுத்துக் கொள்வதற்கு முன்னர் பழைய பாடத்தை மாணவர் எந்த அளவு புரிந்து கொண்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளச் சில பல கேள்விகளைக் கேட்பார்.

அம்முறையில் ஒரு நாள் அரிச்சந்திர புராணத்தில் வரும் “அவமே புறம் அறைந்தமை” என்ற தொடரில் வரும் “அறைந்தமை” என்ற சொல்லுக்குச் சொல்லிலக்கணம் கூறுமாறு கேட்டார். அதுவரை இலக்கணம் என்றால், இலக்கணத்திற்குப் பாடமாக வைத்திருக்கும் நூலில் ஒரு பக்கம் இரண்டு பக்கங்களை ஒப்பிப்பதோடு சரி: அதனால் சொல்லிலக்கணம் என்பது என்ன எனப் புரியாமல் விழித்தோம். அவர் “இடவழுவமைதி தனித் தன்மைப் பன்மை” என்பதுதான் இதன் சொல்லிலக்கணம் என்றார்.