பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

என் தமிழ்ப்பணி

விழையும் பெருவளம் மிக்க வணிக மக்களின் வாழ் விடமாயது. வறுமையால் வாடித் தன்னை வந்தடையும் உலக மக்கள் அனைவர்க்கும் வழங்கினும் வற்றாப் பெருவளம் உடையது. இவை அனைத்திற்கும் மேலாக, ஆன்றவிந்தடங்கிய சான்றோர்களைப் பெற்றது.

'இவ்வாறு ஒரு நல்ல நகருக்கு உரிய சிறப்புக்களில் ஒன்றையும்விடாது, அனைத்தையும் தனக்கே உரியவாகப் பெற்ற புகார் நகரின் அருமை பெருமை அறிந்த பெரியோர்கள், “புகார், பழம் பெருங்காலத்தே தோன்றிப் பாரெலாம் போற்றி வாழ்கிறது.” என வாயாரப்பாராட்டுவரேயல்லால், “அது ஒரு காலத்தே பாழாம் எனக் கூறார்” எனப்பாடிப் பாராட்டியுள்ளார் சிலம்பு அளித்த சேரர்குல் இளங்கோ.3

காவிரியின் வடகரையில் விளங்கிய புகார், மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இருகூறாப் பிரிந்திருந்தது. கடற்கரையை ஒட்டியிருந்த பகுதி மருவூர்ப்பாக்கம். அதற்கு, மேற்கில் இருந்தது பட்டினப்பாக்கம்; முன்னதைப் புகாரின் புறநகராகவும், பின்னதை இதன் அகநகராகவும் கொள்ளின் பொருந்தும். வாணிகம் புரிந்து பொருள் ஈட்டி வாழும் மத்திய வகுப்பாரும், மெய்வருந்தும் தொழில் புரிந்து வயிறு வளர்க்கும் பிற்பட்ட வகுப்பாரும் குற்றேவல் புரியும். தாழ்த்தப்பட்ட வகுப்பாரும் வாழும் இடம் மருவூர்ப் பாக்கம்: அரசனும், அமைச்சர் முதலாம் அரசியல் துணை வரும், மன்ன்னும் மதிக்கத்தக்க மாநிதிச் செல்வரும் ஆகிய உயர் வகுப்பார் வாழும் இடம் பட்டினம்பாக்கம்.4

மருவூர்ப் பாக்கத்துத் துறைமுகம், பாய்மரக் கம்பத்தில் நாட்டிய தத்தம் நாட்டுக் கொடிகள் காற்றில் அசைய, கட்டிய கட்டுத்தறிகளும் நிலை குலைந்து பேர்மாறு ஒயாது ஆடிக்கொண்டேயிருக்கும் களிறுகள்போல், அலைகளால் அலைப்புண்டு நிற்கும் நாவாய்களால் நிறைந்திருக்கும்.5