பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

என் தமிழ்ப்பணி


புகார் நகரில், காவிரி கடலோடு கலக்குமிடத்தில் சோமகுண்டம், சூரியகுண்டம் எனப் பெயர் பூண்ட இரு பொய்கைகள் இருந்தன; அவற்றில் மூழ்கி, அவற்றின் கரைக்கண் இருந்த காமவேள் கோட்டத்துக் கடவுளை வணங்கினால் மகளிர், கணவரைப் பிரியாது வாழும் பெருவாழ்வை இம்மையில் பெற்று, மறுமையில், போக பூமியில் அவரோடு பிறந்து பேரின்பம் நுகர்வர்.20

பூத்து மணம் பரப்பும் தொழில்களால் பொலிவு பெற்றது புகார். மன்னர்க்கு ஏற்றனவும் மக்களுக்கு ஏற்றனவும், மாதவர்க்கு ஏற்றனவும் ஆகிய பூஞ்சோலைகள் பல புகார் நகரில் இடம் பெற்றிருந்தன. வடிவாலும், வண்ணத்தாலும், வாசனையாலும், வேறுபட்ட வகை வகையான மலர் மரங்களைக் கொண்ட இலவந்திகைச் சோலை, அவற்றுள் ஒன்று; அதனிடையே அழகிய பொய்கை ஒன்றும் இருந்தது. அப்பொய்கையில் வேண்டுமளவு நீரை வேண்டும் பொழுது நிறைக்கவும் போக்கவும் வல்ல பொறி பொறுத்தப் பெற்றிருந்தது. அத்தகைய மாண்புமிக்க அம்மலர்ச் சோலையில் மன்னர் மட்டுமே மகிழ்ந்து வாழ்வர்.21

உவவனம் என்பது புகாரில் இருந்த மற்றொரு பூஞ்சோலை; மக்கள் செல்லும் உரிமை வாய்ந்தது அம்மலர்ச் சோலை. பளிங்கால் ஆன அழகிய மண்டபம் ஒன்று அதன் இடையே இருந்தது. அகத்தே இருப்போரின் வடிவைப் புறத்தே புலப்படுத்தும் அது, ஆங்கு அவர் எழுப்பும் ஒலியை, ஒரு சிறிதும் புறம்போகவிடாது அடக்கிக் கொள்ளவல்லது. அம்மண்டபத்தின் இடையில் புத்தன் பாதம் பொறித்த தாமரைப்பீடம் ஒன்றை அமைத்திருந்தனர். அப்பீடத்தில் இட்ட அரும்புகள், இட்டவுடனே மலர்ந்து மணம் வீசும்; மலர்கள் வாடா, தேனுண்ணும் வண்டு, அம்மலரை மொய்க்காது; அத்துணை அருமை வாய்ந்தது அப்பூஞ்சோலை.22