பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

13

னிற்கும் கடமைகள்” என்ற தலைப்பில் பேசினேன். அதுவே என் முதற் பேச்சு.

எங்கள் ஊரில் “பானு கவி மாணவர் தமிழ்ச் சங்கம்” என்ற பிறிதோர் அமைப்பும் இருந்தது. கம்ப இராமாயணத்தை ஆழ்ந்து படிக்காமலே பட்டிமன்றம், வழக்காடு மன்ற மேடைகளில் நின்று கொண்டு வெறும் சொல் சாலம் காட்டுவார் போல் அல்லாமல் ஆழமாகப் படித்து “வாலி வழக்கு” என்பது போலும் அரிய நூல்களைப் படைத்த அமரர் திரு. புரிசை முருகேச முதலியார் போன்றவர்கள் பானுகவியாரின் மாணவர்கள். அவர்கள் உருவாக்கியது அச்சங்கம். அதிலும் நான் பங்குகொண்டவன் தான்; ஆண்டுதோறும் திருவத்திபுரத்திற்கு வந்து செல்லும் ஞானியார் அவர்கள் அயர்ந்து உறங்கத் தொடங்கும் போது, அவர் உறங்கும் வரை அவர் கால்களைப் பிடித்துவிடும் பழக்கமுடைய என்னை, ஒரு முறை அவர் தலைமையில் “மணிவாசகர் அளித்த இரு வாசகம்” என்ற தலைப்பில் பேசுமாறு பணித்து விட்டார்கள். சங்க இலக்கியங்களை ஓரளவு கற்றவனே அல்லது, சமய இலக்கியம் படித்தவன் அல்லன், ஆனாலும் திருக்கோவையாரில் ஒரு சில பாக்களைப் பள்ளியில் படித்தவன். என் தந்தையார் மார்கழி மாத விடியற் போதில் படிக்கும் திருவாசகப் பாக்களைக் கேட்டுக் கேட்டுச் சில பாடல்களை நினைவில் வைத்திருப்பவன். அதனால் தன் மகள் அவள் விரும்பும் இளைஞனோடு அவனுர் சென்று விட்ட போது, அவர்களைத் தேடிச் சென்ற தாய், எதிரே வந்த ஓர் இள ஆணையும் ஓர் இள மகளையும் அணுகி, உங்களைப் போன்ற இருவர் இவ்வழியில் செல்வதைக் கண்டீர்களா எனக் கேட்க, அதற்கு அந்த இளைஞன், ஒன்று இருவரையும் பார்த்தேன் அல்லது இல்லை எனக் கூறியிருக்க வேண்டும், ஆனால் அதற்கு மாறாக “என்னைப் போன்ற இளைஞனைப் பார்த்தேன்” எனக் கூறி விட்டுத் தன் பக்கத்தில் நிற்கும் தன் காதலியைப் பார்த்து, “இந்த அம்மா, வேறு