பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

27



ஆனால் அதைக் கடிந்து கொண்டால் மேற்கொண்டு வந்த காரியம் கெட்டு விடும்: நெஞ்சை ஒதுக்கி விட்டுச் சென்றால், வெற்றி கிட்டாது. ஆகவே அந்நெஞ்சு ஏற்குமாறு இனிய சொற்களால் அதற்கு அறிவூட்டி அதையும் உடன்கொண்டு செல்லக் கருதிற்று உள்ளுணர்வு.

ஆசைக்கு அடிமைப்பட்டு, காதலியைக் காணத் துடித்து நிற்கும் நெஞ்சை அணுகி, “நெஞ்சே! காதலி பேரழகு வாய்ந்தவள். அவளைப் பிரிந்து வாழ்வது நம்மால் இயலாது. மேலும் நாம் போய் விட்டால், அவள், நம் பிரிவை எண்ணித் துயர் உறுவதால், அவள் அழகு அவளை விட்டுப் போய்விடும்.

போன அழகு பின்னர் எப்பாடுபடினும் மீண்டு வராது ஆகவே, அவள் அழகு கெட, நாம் துயர்உற பிரிந்து போவது பொருந்தாது என, அன்று, எத்தனையோ முறை எடுத்துச் சொன்னேன். அதை நீ அப்போது கேட்க மறுத்து விட்டாய்.

வினைமாற்றுவதையே விரும்பி நின்றாய். வேறு வழியின்றி நானும் அதற்கு இசைந்தேன். புறப்பட்டு இவ்வளவு தூரம் வந்து விட்டோம், இனி, வீட்டிற்கு வெறுங்கையோடு மீள்வது மதியுடைமையாகாது.

மேலும், நம் பிரிவைப் பெறாது நம்மனைவி வருந்துவா ளெனினும் அவள் நாம் வறிதே மீளக் காணின் மகிழாள்: மாளாத் துயர்கொண்டு மாண்டு விடுவள். வினைக் கருதிப் பிரிந்து வந்த நாம், அவள் கண்டு வியந்து மகிழுமளவு மாநிதி ஈட்டிச் சென்ற வழியே, அவள் மனம் மகிழும். ஆகவே அவள் மகிழ்ச்சியே உன் குறிக்கோளாயின், அவள் மகிழுமாறு மாநிதி ஈட்டும் பணி மேற்கொண்டு மேற் செல்வோம் வருக.