பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

39

நிற்கும் புலவர்க்கும், பாணர், பொருநர், கூத்தர் முதலாம் இரவலர்க்கும் வாரி வழங்கி உயர் புகழ் பெற்றுப் பெருமையடைவர்.

செந்நெல்லையும் வெண்கல் உப்பையும் நாடு வேண்டுமளவு பெற்றிருந்தும் அந்நாட்டு மக்கள் அவற்றோடு அமைதி காண்பாரல்லர். ஒரு நாட்டில் உணவுக் குறைபாடு என்றுமே உண்டாசாகிருத்தல் வேண்டுமாயின் அந்நாடு நெல்லுணவு ஒன்றையே நம்பியிருத்தல் கூடாது; நெல்லுணவிற்குத் துணையாக வேறு துணையுணவுகளையும் மக்கள் அறிந்து மேற்கொள்ளுதல் வேண்டும் என்பதை அந்நாட்டு மக்கள் உணர்ந்திருந்தனர்; அதனால் கடற்கரை நாடாகிய தங்கள் நாட்டிற்குக் கடல் நீர் அளிக்கும் மீன் உணவு, அத்தனை துணை உணவாய்ப் பயன்படும் என அறிந்து அம்மீன் பிடிக்கும் தொழிலை நன்குக் கற்றிருந்தனர்.

பொடி மீன்களும் பிழைத்துப் போகாதவாறு, சிறு சிறு கண்கள் அமைத்துப் பின்னிய அழகிய வலைகளை நீண்ட கயிறுகளில் பிணித்து எடுத்துச் சென்று, கடற்பரப்பில் மீன்கள் நிறைய வாழும் இடங்களை அறிந்து அவ்விடங்களைச் சுற்றி வலைகளை விரித்து வைத்துவிட்டு வந்து கரையேறுவர். சிறிது பொழுது கழித்து, தாய், தந்தை, மனைவி மக்கள், மாமன், மாமி, மருமகன், மருமகள் ஆகிய உறவினர் அனைவரும் ஒன்று கூடி நின்று வலை பிணித்த கயிற்றிவை ஒருசேரப் பற்றி ஒருமுகமாக ஈர்ப்பர்:

வலையும் பெரியதாய், வலையில் சிக்கிய மீன்களும் - பெருங் கூட்டமாய் அமைந்து விடுமாயின் வலையை எளிதில் ஈர்க்க மாட்டாது எல்லோரும் தளர்ந்த போவர்; என்றாலும் தளர்ச்சியால் தம்முயற்சியைக் கைவிடுவாரல்லர்: உப்புப் பொதியேற்றிய சகடு சேற்றில் சிக்கி ஆழ்ந்துபோன விடத்து எருதுகள் மண்டியிட்டும், மண்டையைத் தாழ்த்தியும் ஈர்த்து