பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

என் தமிழ்ப்பணி



கடல் நீரில் நீந்தி மகிழ்ந்து வாழும் மீன் இனங்களை வலை வீசிப் பிடித்துக் கடல்நீரினின்றும் வெளிப்படுத்தியதனால் அவற்றின் உயிரைப் போக்கி, உயிரிழந்து போன அவற்றை ஊரார்க்கு எல்லாம் பகிர்ந்து கொடுத்துவிட்டு உயிர்க் கொலை புரிந்து விட்டோமே என்ற உணர்வு தானும் கொள்ளாது, கடற்கரை மணலில் களித்துக் கண்ணுறங்கும் அவன் நாட்டுப் பரதவர் கொடுஞ்செயல் அவன்பாலும் குடிகொண்டு விட்டது.

பெருங்குடியில் பிறந்த இவளைக் காதல் வலைவீசிக் கவர்ந்து கொண்டு காதல் மிகுதியால் மனைப்புறம் வந்தும், மேனி நலம் இழந்து மாறுபட்டும் வருந்துமாறு இவளை வருத்தி இவள் மேனி வேறுபாடு காணும் ஊரார் வாயெல்லாம் இவளைப் பழி கூறுமாறு அலராக்கிவிட்டு இவளுக்கு இத்தகைய இடர்பாட்டினை உண்டாக்கி விட்டோமே என்ற உணர்ச்சி தானும் இன்றி தன் ஊரில் தலை மறைந்து மகிழ்ந்து வாழ்கின்ற இவனை என்னென்பேன் என எண்ணிச் சினந்தாள்; அவன் கொடுமையை அவனுக்கு எடுத்துக்காட்டி இடித்துரைக்கத் துணித்தாள்.

அத்துணிவோடு அவனூர் சென்று அவனைக் கண்டாள்; அவனைக் காணாமுன் அவன்பால் அவள் கொண்டிருந்த சினம், அவனைக் கண்டதும் எங்கோ சென்று மறைந்தது. அவன் அவன் காதலிக்குச் செய்யும் கொடுமைகளை விளங்க எடுத்துரைக்க அவள் வாய் வந்திலது. அதனால் அவனாட்டு இயற்கை வளத்தினை இனிதெடுத்து பாடுவா போல், அவன் நாட்டு நுளையர்களின் கொடுஞ்செயலை எடுத்துக் கூறுமுகத்தான், குறிப்பு மொழிகளால் அவன் கொடுமையை அவன் உள்ளம் உணருமாறு செய்தாள்.

பின்னர் “அன்ப! அவள் உன்னைக் காணாமையால் காதல் நோய் மிகுந்து கலங்குகிறாள்; அக்கலக்க மிகுதியால்