பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

என் தமிழ்ப்பணி

பார்த்து அப்பொருள்களையெல்லாம் முதற்கண் கூறிவிட்டுப், பின்னர், அப்பொருள்கள் உண்மைப் பொருள். களாகா என்பதற்கான காரணகாரியங்களை வரிசையாக எடுத்துவைத்து மறுத்தல் வேண்டும்.

அது மட்டுமன்று, தான் கூறிய பொருள் ஏற்கத்தக்க பொருள் அன்று என்பதற்குப் பிறர் என்னென்ன காரணங்களைக் காட்டக் கூடும் என்பதையும் எண்ணிப் பார்த்து அவற்றையும் எடுத்து வைத்துப் பின்னர், அக்காரணங்கள் எவ்வெவ் வகைகளால் ஏற்கத்தக்கன அல்ல என்பதையும் எடுத்துக் கூறி அத்தடைகளை உதறித் தள்ளுதல் வேண்டும்

இவ்வாறு நடை விடை மூலம் பொருள் கூறிச் செல்லும். நெறியினை இவ்வுரையாசிரியர், ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொரு தொடருக்கும் மேற்கொண்டு உரை கூறிச் செல்லும் அழகு இவர்தம் ஆராய்ச்சித் திறத்திற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாம். உதாரணத்திற்கு ஒன்று.

களவொழுக்கமாவது கந்தருவ ஒழுக்கமாம் என முதல் சூத்திரத்தில் கூறி. அதற்கு விளக்கம், உரைக்கப் புகுந்த “அதுவே” எனத் தொடங்கும் இரண்டாவது சூத்திரத்தில் வரும் “தானே அவளே” என்ற தொடருக்குப் பிறர் கூறும் உரைகளை மறுத்துத் தான் கூறிய உரையை நிலைநாட்டும் அருமை பாராட்டிற்கு உரியது.

காதலன் காதலி என வேறு பிரித்து அறியப்படாதவர் கந்தருவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆகவே, களவு, கந்தருவ வழக்கத்தோடு ஒக்கும் என்று கூறியதனாலேயே, அவனும் அவளும் வேறு பிரித்து அறியப்படாதவர்: என்பது புலனாகவும், அவர்கள் இருவரும் அன்பாலும், குணத்தாலும், கல்வியாலும், உருவாலும் திருவாலும் ஒருவரோடொருவர் வேறு பிரித்து அறியப்படார் என்பது உணர்த்தவே, “தானே அவளே” என்றார், எனக் கூறின் கூறியது கூறலாம்.