பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

என் தமிழ்ப்பணி



வெறியாடு களத்திற்கு வந்த காதலன் வாளா வந்திலன்; தன் நாட்டு மலைவளர் சந்தனக் குழம்பு மார்பில் பூசப்பெற்று மணக்க, தன் நாட்டில் அடைதற்கு அரிய மலைக் குகைகளில் மலரும் இயல்பினவாய மலர்களால் ஆன மாலையைச் சூழ்ந்து பறக்கும் வண்டுகளின் ரீங்காரம் ஓ என ஒலிக்க வந்திருந்தான். அப்புது மணத்தையும், புதிய ஒலியையும் என்னைப் போலவே அவ்விழாக்களத்தில் வந்திருந்தோரில், வேறு யாரேனும் உணர்ந்து, அவற்றிற்கான காரணத்தைக் காண முற்பட்டிருந்தால் என்னாகியிருக்கும் எனக் கவலையுறத் தொடங்கினான்.

அவ்வாறு அவள் கவலையுற்றுக் கிடக்கும்போது அவள் தோழி ஆங்கு வந்தாள். வந்தவள்பால் தன் உள்ளத் துயரை உரைத்து வருந்தினாள். அவள் துயர் நிலை கண்ட தோழி

“பெண்ணே உன் துயர் நீங்க வேண்டுமாயின், அது உங்கள் திருமணம் ஒன்றினால் ஆகும். ஆகவே, திருமணத்தை விரைந்து முடித்துக் கொள்ளுமாறு உன் காதலனுக்கு உணர்த்தல் வேண்டும். களவின்பத்தில் ஆழ்ந்து கிடக்கும் அவன் உள்ளத்தில் உன் வேண்டுகோள் எளிதில் இடம் பெறாது. ஆகவே அவன் உன் துயர் நிலையை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்; அதுவும் நீ உன் வாயினால் உரைக்க உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்; அதற்கு நான் ஒரு வழி காணுகிறேன்; அஞ்சாதே” எனக் கூறித் தேற்றினாள்.

இரண்டொரு நாள் கழித்து, ஒருநாள் இரவு இளைஞன் வழக்கம்போல் வந்து ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருந்தான். அதைக் கண்டு கொண்ட தோழி தன் அருகில் கிடந்து வருந்தும், அப்பெண்ணை நோக்கி, “பெண்ணே! இவ்வாறு வருந்தும் நீ, அன்று நம் தாய் வெறியாட்டு நிகழ்த்திய பொழுது, அது கண்டு அஞ்சுவதற்குப் பதிலாக நகைத்து மகிழ்ந்தாயே, அது ஏன்? அவ்வாறு நகைக்க உன்னால் எப்படி முடிந்தது?” என வினவினாள்.