பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

67

வேண்டும்' என்ற உணர்வு அவனுக்கு உண்டாயிற்று. உடனே அப்பணி மேற்கொண்டு புறப்படத் தொடங்கினான். அதை அவள் அறிந்து கொண்டாள். பொருளீட்ட வேண்டுவது அவன் கடமையென்பதை அவளும் அறிந்திருந்தமையால் அவன் விருப்பத்திற்கு மறுப்பளிக்கவில்லை.

ஆனால் பொருள் தேடிப் போகும் இவர், ஆங்கு எவ்வளவு காலம் இருக்க வேண்டி வருமோ; அவ்வளவு காலம் இவரைக் காணாது நான் எவ்வாறு தனித்து வாழ்வேன் என எண்ணி வருந்தினாள். அவ்வருத்தம் நிறை மனத்தோடு தன் மனைப்புறத்தே உள்ள நொச்சிவேலி அருகே நின்றிருந்தாள். அவளைத் தேடி ஆங்கு வந்த அவன் அவள் முகக்குறிப்பில் அவள் மணக் கலக்கத்தைக் கண்டு கொண்டாள். உடனே அவள் அருகில் சென்று நின்றான். வேலியில் படர்ந்திருக்கும் முல்லைக் கொடியை அவளுக்குக் காட்டி

‘பெண்ணே! இம்முல்லை இப்போதுதான் தளிரீன்றுளது இது அரும்பீன்று மலரும் அத்துணை விரைவில் நான் வந்து விடுவேன். கார்காலம் தொடங்கியதும், இதுவும் மரைத் தொடங்கி விடும். நானும் அக்கார்காலத்தில் திரும்பி விடுவேன். இது உறுதி. அச்சிறு காலம் வரை; கடமையை எண்ணி கலங்காது காத்திருப்பாயாக” எனக் கூறித்தேற்றினாள். அவன் உரைத்த உறுதிமொழியை நம்பி, அவள் ஒரு வாறு உளம் தேறி, அவனுக்கு விடையளித்தாள்

அவன் போய் விட்டான். கடமையை எண்ணி அவள் காத்துக் கிடந்தாள். நாட்கள் கழிந்து கொண்டேயிருந்தன. கார்காலமும் தொடங்கிவிட்டது. ஆயினும் அவன் வந்திலன். ஒவ்வொரு நாளிலும் அவனை எதிர் நோக்குவாள் அவன் வருகையைக் காண வாயிற்கண் வந்து, ஊரெல்லாம் உறங்கும் வரை காத்துக் கிடப்பாள்.