பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

என் தமிழ்ப்பணி

கூறுவதையே வழக்கமாகக் கொண்ட ஒளவையார், “அறம் செய்” என்பதே சுருங்கிய வாய்பாடாகவும், அது கொள்ளாது. அறவழி வாழ எண்ணிவிட்டால் அறவழி வாழ்ந்து விடுவர் என்ற துணிவினால் “அறஞ் செய விரும்பு” என மேலும் ஒரு சொல் விரிந்த தொடரை மேற் கொண்டுள்ளார்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்” என்ற வள்ளுவர் வாய் மொழியும், “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” என்ற மக்கள் வாய்மொழியும் காண்க.

மனிதனை மதிப்பிடத் துணைபுரிவன, அவன் செய்யும் செயலும், உரைக்கும் சொல்லுமே ஆம். “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்பது திருக்குறள். “மனத்தது மாசாக மாண்டாரின் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்” என்பதற்கேற்ப உணர்வு ஒன்றாக, சொல்லும் செயலும் அவ்வுணர்வுக்கு, மாறுபட்டனவாக வாழும் வன்கணாளரும் உலகில் உலவுகின்றனர் என்பது உண்மையே என்றாலும், வேடமிட்டு நடிக்கும் அந்நாடகம் விரைவில் கலைந்து போகும் ஆதலின், ஒருவன் நல்லவன், நல்லவனல்லன் என்பதை அவனாற்றும் செயல் கொண்டே உலகம் மதிப்பிடும். அச்செயல், அவன் உணர்வையே அடிப்படையாகக் கொண்டு நிகழும் ஆதலின் மனிதன் அவன் உள்ளத்து உணர்வுக்கு ஏற்பவே மதிப்பிடப்படுகிறான் என்பதே உண்மை.

அந்த உணர்வு அவன் மனத்தே எழுவது; நல்லுணர்வோ தீயவுணர்வோ, மனம் எண்ணிய வழி எழுந்துவிடும்; நல்லுணர்வுடைய மனம், விரும்பிவிட்டால் அந்நல்லுணர்வைக் கைவிட்டுத் தீயவுணர்வைக் கக்கலாம்; அது போலவே, தீயவுணர்வு உடையதாக இருந்த மனம், நினைத்த அக்கணமே அத்தீயவுணர்வைக் கைவிட்டு