பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

என் தமிழ்ப்பணி


ஆகவே ஒருவன் நல்லவன். நல்லவன் அல்லன் என்பது அவன் சார்ந்து நிற்கும் இனத்தின் இயல்புக்கு ஏற்பவே மதிப்பிடப்படும். “உன் நண்பனை அடையாளம் காட்டு: நீ எத்தகையவன் என்பதைக் கூறகிறேன்” என்ற பெரியார் வாக்கும் இதையே வலியுறுத்துவது காண்க. சார்ந்து நிற்கும் இனம் நல்லினமாயின், அவனும் நல்லவனாவன். அது சிற்றினமாயின் அவனும் தீயோனாவன். -

ஒர் உணர்வை இழந்தால் அதை மீண்டும் பெற்றுக் கொள்ள இயலும், அது அவன் மனத்தகத்தே இருப்பதால். ஆனால், ஒர் இனத்தோடு சேர்ந்து, அவர் இயல்புகளுக்கு அடிமையாகி விட்டவனால், அவ்வியல்பிலிருந்து விடுபட இயலாது. ஆகவே இனத்தைத் தேர்ந்து கொள்வதில் விழிப்பாய் இருத்தல் வேண்டும்.

“மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தானாம்
இன்னான் எனப்படும் சொல்.”


என்ற குறளில், இத்துனைப் பொருளும் அடங்கி இருப்பது அறிக.