பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

என் தமிழ்ப்பணி

யிருப்பள் என்பதை நீயே எண்ணிப்பார்: திணைப்புனத் திற்கே, அவள் அவ்வளவு கருத்துடையளாயின், தான் பெற்ற தன் மகள்பால் அவள் எவ்வளவு கருத்துடையளாவள் என்பதை இயம்புவது ஒண்னுமோ? காதல் அளிக்கும் மனக் கவலையால் நலனிழந்து கிடக்கும் இவளை இந்நிலையில் அவள் பார்த்து விட்டால் என்னாவது? அவள், தன் மகளை இன்னமும் பேதைப் பருவத்தினள் என்றே கருதியுள்ளாள்.

இவளை, அக் கருத்துடைய இப்போது காணினும்,அவள், இவள் துயர் தீர்த்தற்கு வேண்டும் அனைத்தையும், உடனே விரைந்து மேற்கொள்வள். அது தீர்க்க வல்லார் எனத்தான் அறிந்த எவர் துணையையும் வேண்டிப் பெறுவள்.

அத்தகையாள், மகள் பேதைப் பருவம் கடந்து விட்டாள்; பெதும்பைப் பருவத்தை அடைந்து விட்டாள்; அப்பருவத்தில் மகளிர்க்கு இயல்பாக உண்டாகும் மன நோயே இது என உணர்ந்து கொண்டால், உடனே, அம் மனநோய் நீக்க வல்லவன் எனத்தான் நினைக்கும் ஒருவனுக்கு இவளை மணம் முடித்து வைத்து இவள் மனநோயைப் பேர்க்கத் துணிவள்; துணிந்தவாறே முடித்தும் விடுவள். அந்நிலை உண்டாகிவிட்டால், இவள், உன் மார்பையே தன் உடைமையாக அடைவதற்குப் பதிலாக யாரோ பிறன் ஒருவன் மார்பையே பெறவேண்டி நேரிடும்.

அதை இவளால் தாங்கிக் கொள்வது இயலாது; அந்நிலையே, இவள் தன் உயிரிழந்து போவள். ஆகவே அந்நிலை உண்டாகாவாறு, இவளைக் களவில் கண்டு மகிழ்வதற்கு இடையிடையே, இவளை வரைந்து கொள்வதற்கு வேண்டிய முயற்சிகளையும் இப்போது விரைந்து மேற்கொள்வாயாக” எனத் தன்னை நோக்கிக் கூறாமல் கூறியதாக உணர்ந்தான்; உடனே மணத்தில் சென்ற மனம் உடையனாய், தன் ஊர் நோக்கி விரைந்து சென்றான்.