பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

என் தமிழ்ப்பணி

மாலைக் காட்சிகளைக் காணின் சிறிது மறையும் என்று கருதிய தோழி ஒரு நாள் மாலை, அவளைக் 'கடல்வரை சென்று வரலாம் வா' என அழைத்தாள்; தலைவன் ஏறிச் சென்ற கலம், கொண்டல் கொணர வந்து கரை சேர்கிறதா எனக் கண்டு வரலாம் என்ற கருத்தால் அவளும் அதற்கு இசைந்தாள். இருவரும் கடற்கரை நோக்கி நடந்தனர்.

இடை வழியில் ஒரு காட்சி : வயலில் வெண்ணெல் கதிர் முற்றித் தலை சாய்ந்து கிடந்தது. நாரை ஒன்று வரப்பில் அமர்ந்து இரை தேர்ந்து உண்டு உவந்திருந்தது. சிறிது நாழிகைக்கெல்லாம் வயலுக்குரியார் கூட்டமாய் வந்து வயலில் இறங்கிக் கதிர்களை அறுக்கத் தலைப்பட்டனர்; அவர் செயல் கண்ட நாரை, ஈங்கிருந்து இரை தேர்தல் இனி இயலாதே என ஏங்கிச் செயலற்று சிந்தை நொந்தது. நாரை அவ்வாறு உளம் நொந்து கொண்டிருக்கும் போதே களம்பாடி வாழ்வார். அவண் வந்து சேர்ந்தனர். வந்தவர் கழனிக்குரியாரை வாழ்த்த, தம் தண்ணுமைகளை முழக்கினர். அவ்வொலி நெஞ்சு வருந்தி நிற்கும் நாரையைத் துணுக்குறச் செய்து விட்டது. உடனே அது அது காறும் தனக்கு உணவூட்டி வாழ்வளித்து வந்த வயலை மறந்து விட்டு தான் இருந்து வாழும் பனை மரத்து மடலுக்குப் பறந்து சென்றது.

இக்காட்சியைக் கண்டவாறே இருவரும் கடற்கரையை அடைந்தனர்; ஆங்கு வாணிபம் கருதி வெளிநாடு சென்றிருந்த கலங்கள் வரிசை வரிசையாக வந்து கரை சேரும் காட்சியைக் கண்டனர்: அவ்வாறு கரையேறும் கலங்களுள் : தன் காதலனுக்குரிய கலம் இல்லாமையை அப்பெண் கண்டு கொண்டாள். அவள் கலக்கம் மிகுந்தது. கண்கள் நீர் சொரிந்தன. கவலையை மாற்றிக் களிப்பூட்ட உதவும் எனும் கருத்தோடு காண வந்த கடற்கரைக் காட்சிகள் அவள் கலக்கத்தை மேலும் மிகுவிப்பனவாகவே தோன்றின.