பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

என் பார்வையில் கலைஞர்



போல் அரசு சட்ட, திட்டங்கள்தான் வழிகாட்டி. ஆனாலும், அந்த விதிகளுக்கும் வழிகாட்டிகளாகச் செயல்படுகிறவர்கள் இவர்கள். என்றாலும், இன்றைய இளைய தலைமுறையில் உருவாகி இருக்கும் நேர்மையான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை நம்மால் பார்க்க முடிகிறது.

1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கும் போதே, சென்னைக்கும் காஞ்சிபுரத்திற்கும் இடையே உள்ள ஸ்ரீபெரும்புதூரில், இரவு எட்டரை மணிக்குப் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு இருந்த ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகளின் மனிதக் குண்டால் கொல்லப்பட்டார். அவர் பிரதமராகக் கூடாது என்பது விடுதலைப் புலிகளின் நோக்கம் என்று கூறப்படுகிறது. இதில் கலைஞரும் முதல்வராக முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும் என்றாலும், தமிழக அரசியலைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. கலைஞரைக் கொன்றுதான் தமிழ் ஈழம் உருவாக வேண்டும், என்றால் அதற்கும் அவர்கள் தயாராக இருப்பார்கள்.

பல தடவை வட இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இருக்கிறேன். இந்த விடுதலைப் புலிகள் கொன்ற தமிழர்களின் எண்ணிக்கை, இலங்கை இராணுவம் கொன்ற எண்ணிக்கைக்குச் சளைத்ததல்ல. மாற்றுக் கருத்துள்ள தமிழ்ச் சிந்தனையாளர்கள், கவிஞர்கள் போன்றோர்களைக் கடத்துவதும், அவர்களைக் கொலை செய்வதும் இவர்களுக்கு வாடிக்கை. எனது குடும்பத்தினரும் நண்பர்களும் கூட ‘நீங்க கலைஞரை எதிர்த்துச் செய்தி போடுங்க. ஜெயலலிதாவை எதிர்த்துச் செய்தி போடுங்க. ஆனால் எல்டிடியை எதிர்த்துச் செய்தி போடாதீங்க. வீட்டிலேயே வந்து கொல்லுவாங்க!' என்றனர்.

இவர்களுக்குப் பயந்து கொழும்பில் ஒதுங்கியிருந்த அமிர்தலிங்கம் வீட்டிலேயே சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, ஈரக்கை உலரும் முன்பே அந்தப் பெருமகனை சுட்டுக் கொன்றவர்கள் இவர்கள். இவர்களுக்கு தமிழகத்தில் கலைஞர் இருந்தாலும் சரிதான், போனாலும் சரிதான். ராஜீவ் காந்தி கொலையில், நமது ரத்தமான பதிமூன்று தமிழ் போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதை, இவர்களுக்கு இன்னும் கொம்பு சீவி விடும் இங்குள்ள தமிழ்த் தேசியர்கள் பேசுவதே இல்லை.