பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

என் பார்வையில் கலைஞர்



சேடப்பட்டி முத்தையா அவர்களின் கை கால்கள் நடுங்குவதை என்னால் பார்க்க முடிந்தது. ஏதோ பேச முயற்சிக்கிறார். பேச்சு வரவில்லை. இந்தச் சமயத்தில் பலராம் ஜாக்கர் அவர்கள் மிகவும் பெருந் தன்மையோடு, அப்படி நடந்ததுக்கு வருந்துவதாகவும், இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் உறுதியளித்தார்.

திடீரென்று செய்தியாளர்கள் கூட்டத்தில் இருந்து ஒரு குரல் ஒலித்தது. நாடாளுமன்றப் பேரவைத் தலைவரை நோக்கி 'இப்போது கேள்வி கேட்ட இவர் கருத்து, பத்திரிகையாளர்களின் கருத்தல்ல’ என்று சக பத்திரிகையாளர்களே மூக்கில் விரல் வைக்கும்படிக் குரலிட்டது. அப்படி ஒலித்த குரல், நாமெல்லாம் ‘பெருமைப் படும்’ தமிழர் தளபதி என்று அழைக்கப்படும் கீ.வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்ட விடுதலைப் பத்திரிகையின் செய்தியாளரும், எனது இனிய நண்பருமான ராதாதான்.

சட்டப் பேரவைக்குள் சுடு சொற்களும், அடிக்கப் போவது போன்ற செயல்பாடுகளும், வெளியேற்றமும், வெளியேற்றப் படுவதும் மாமூலாகிவிட்டன. ஒரு தடவை பேரவையில் இருந்து, காங்கிரஸ் உறுப்பினர்களும், திமுக உறுப்பினர்களும் கிட்டத்தட்டத் துரத்தப்பட்ட போது, எதிர்க்கட்சி அறையில் இருந்து, அதன் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக, பேரவையின் லாபிக்குள் வந்த போது, அவர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், பேரவைக் காவலர்கள் இருவர், அவரது கையைப் பிடித்து இழுத்து மல்லாக்கத் தள்ளினார்கள். இதனால், அவருக்கு இரு கரங்களுமே பிசகி விட்டன. அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டார். கலைஞர், அவரை மருத்துவமனையில் சென்று பார்த்தார். எஸ்.ஆர்.பியின் கரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டதே தவிர பாதிப்பு முற்றாக நீங்கவில்லை. இப்போதும் அவரது கைகள் முழுமையாக இயங்கவில்லை.

ஒரு தடவை, தமாகவினர் சட்டப் பேரவைக்குள் தர்ணா செய்த போது பேரவை முடிக்கப்பட்டு, மின்விளக்குகளும் அணைக்கப் பட்டன. மாலை ஏழு மணி வரை ஒரே புழுக்கம். பேரவை முடிந்து விட்டதால், செய்தியாளர்கள் வெளியேற வேண்டும் என்று பேரவைத் தலைவர் ஆணயிட்டார். இதை மீறி, நானும், இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, யுஎன்ஐ, பிடிஐ, இந்து ஆகிய நிருபர்களுமே பிடிவாதமாக உள்ளே இருந்தோம்.