பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

115



சேடப்பட்டி முத்தையா அவர்கள், என்னைத் தனியாக, அவரது அறைக்கு வர வைத்து ‘இந்த ஏசி ரூம்ல உட்காருங்க. அங்க ஏன் போறீங்க’ என்றார். உடனே, நான் 'சார்! நீங்க சிஎம்மப் பகைச்சா எப்படி உங்க வேல போயிடுமோ, அப்படி மத்திய ஆளுங் கட்சியான காங்கிரஸப் பகைச்சா என் வேலை போயிடும். நான் அங்கேதான் போவேன். போகணும்' என்று சொல்லி விட்டு, அவர் வாங்கிக் கொடுத்த காபியையும் குடித்து விட்டு, செய்தியாளர் மாடத்திற்கு வந்தேன்.

சென்னை வானொலி நிலையத்தில் மாலைச் செய்திகளில், சட்டப் பேரவையில் நோயாளி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு மின் வசதியோ, தண்ணீர் வசதியோ தொடர்ந்து இல்லாது போனால், பலர் உடல் நிலையில் சிக்கல் ஏற்படும் என்றும், ஒரு மருத்துவர் மாதிரிச் செய்தி போட்டேன். இதன் விளைவாகப் பத்தே நிமிடங்களுக்குள் சட்டப் பேரவையின் மின் விசிறிகள் சுழன்றன. பேரவை உறுப்பினர்களுக்கு மினரல் வாட்டர் பாட்டில்களும் வந்தன. தவமாகக் கிடந்த செய்தியாளர்களுக்குத்தான் எதுவும் இல்லை. அன்று இரவு முழுவதும் அங்கேயே பழி கிடந்தோம். மறுநாள் காலையில் பேரவையில் அமளி ஏற்பட்டதும், காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டதும், அவரது எதிர்ப்பைத் தெரியப்படுத்த, வானொலிச் செய்திகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகி விட்டது.

எனக்கு, இதோடு முதல்வர் ஜெயலலிதாவுடன் நேருக்கு நேர் வாக்குவாதம் செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

முதலைமைச்சர் ஜெயலலிதா காவிரிப் பிரச்னைக்காக, உண்ணாவிரதம் இருப்பதாக அதிகாரிகளுக்கு முன் கூட்டியே சொல்லாமல், மெரினா வளாகத்தில் அவசர அவசரமாகப் போடப்பட்ட பந்தல் மேடையில் உட்கார்ந்து விட்டார். இது ஒரு பரபரப்பான செய்தி. வீட்டில் இருந்த எனக்குச் சிறிது தாமதமாகத்தான் கிடைத்தது. ஓடோடிப் போய், உண்ணாவிரத மேடையை நெருங்கினேன். உடனே, செல்வி ஜெயலலிதா ‘வாங்க மிஸ்டர். சமுத்திரம்! உங்களுக்காக பழையபடியும் விவரம் சொல்றேன்’ என்று சொல்லி விட்டு, தம் உண்ணாவிரத நோக்கங்களை, ஒரு அறிக்கையைப் பார்த்தபடியே விளக்கினார். அவர் விளக்கி முடித்ததும், எங்கள் உரையாடல் இந்தப் பாணியில் இருந்தது.