பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

123மீது நாற்பத்தாறு லட்ச ரூபாய் அளவிற்கே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதுவும் நிருபிக்கப் படவில்லை. ஆனால், இப்போ கோடி கோடியாக் கொள்ளை அடிக்காங்க, ‘யாருமே கண்டுக்கவில்லையே’ என்று என்னிடம் ஆதங்கப்பட்டார்.

நான் அவரது ஆதங்கத்திற்கான காரண காரியங்களை விளக்கி விட்டு, அவருடைய நிலைமையை இப்படி எடுத்துரைத்தேன்.

‘சார், நீங்க முதல் தடவை முதலமைச்சரான போது, நான் டில்லியில் இருந்தேன். உங்களப் பதவி நீக்கம் செய்யப் போற சமயத்துலதான் சென்னைக்கு வந்தேன். உங்களோடு இருந்தவர்கள் எல்லாம், அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல் ஓடி விட்டதோடு, உங்களுக்கு எதிராகவும் செயல் பட்டதுக்கு நீங்க முரசொலியில் ஒரு கட்டுரை எழுதியதாகக் கேள்விப்பட்டேன். அதுல ‘கட்சிக்காரன் காலுக்கு செருப்பில்லாம இருக்கானேன்னு, அவனுக்கு ஒரு செருப்பு வாங்கிக் கொடுத்தால், அந்த செருப்ப வைச்சே அவன் என்ன அடித்து விட்டான்’ என்கிற மாதிரி நீங்க எழுதினதாக சொன்னாங்க உண்மையிலே நான் கண் கலங்கிட்டேன்

கலைஞர் என்னை அன்போடும், அழுத்தமாகவும் பார்த்தார். நான் அவரை சரியாகப் புரிந்து கொண்டேன் என்பதில் அவருக்கு ஒரு மகிழ்ச்சி. என்னிடம் உற்ற தோழன் போல் பல்வேறு அரசியல் விவகாரங்களையும், தனி மனிதர்களைப் பற்றியும் பேசினார். இவற்றை என் மனதிற்குள் இப்போதும் அசை போடுகிறேன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நானும் கலைஞரிடம் உரிமையோடு பேசினேன். பல தலைவர்களைக் கிண்டலடித்தேன்.

கலைஞர் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மெளனம் சாதிக்கக் கூடாது என்றேன். இலங்கை விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாட்டின் அரசியலைப் பற்றியோ, தமிழக தலைமையைப் பற்றியோ கவலையில்லை. தமிழக அரசில் கலைஞரின் தலைமை வர வேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தால், ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்க மாட்டார்கள் என்று நினைவு படுத்தினேன். கலைஞரைக் கொன்று அதன் மூலம் தமிழ் ஈழம் வரும் என்றால், அவர்கள் அதற்கும் தயாராவார்கள் என்றும் வாதாடினேன். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவோம், சிங்கள ராணுவத்திடம் இருந்து மட்டும் அல்ல, விடுதலைப் புலிகளிடம் இருந்தும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று திமுக சார்பில்