பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

என் பார்வையில் கலைஞர்



என்றாலும், நடுவர் குழுவில் இருந்த பேராசியர்கள் ஒளவை நடராசனும், டாக்டர். பொற்கோவும் எனது வாடாமல்லி நாவலுக்குத்தான் கொடுத்தாக வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதை உறுதி படுத்துவதுப்போல் ஒளவை நடராசன் அவர்கள் ‘பரிசு வேண்டாமுன்னு சொல்கிற முதல் ஆளு நீங்க தான்யா, எதற்காக அப்படி சொன்னீங்க’ என்று மேடையில் கேட்டார். இதனால் ஆதித்தனார் விருது 1996ஆம் ஆண்டிற்காக எனக்கு கிடைத்தது. மூத்த தமிழறிஞர் அருணாசல கவுண்டருக்கும் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வழங்கும் விழா, அமரர் ஆதித்தனார் பிறந்த நாளான மேலே குறிப்பிட்ட நாளில் சென்னை ராணி சீதையம்மாள் அரங்கில் நடைபெற்றது.

முதல்வர் கலைஞர், சரியான நேரத்தில் ராணி சீதையம்மாள் அரங்கிற்கு வந்து விட்டார். சொல்லி மாளாத கூட்டம். கலைஞர் சிறிது கடுகடுப்பாகவே இருந்ததுபோல் தோன்றியது. அரைமணி நேரத்திற்குள் விழாவை முடித்துவிட வேண்டும் என்று, அமைப்பாளர்களிடம் தெரிவித்து விட்டதாகக் கேள்வி. ஒரு மாபெரும் பத்திரிகையின் வேண்டுகோளை புறக்கணிக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே இந்த விழாவிற்கு அவர் இணங்கியிருக்கிறார். தினத்தந்தி உரிமையாளரும், தமிழகத்தில் சாதிய வேறுபாடுகளைக் கடந்து இளைஞர் விளையாட்டு அணிகளை ஏற்படுத்தியவருமான திருமிகு. சிவந்தி ஆதித்தன் தக்கபடி வரவேற்புரை வழங்கினார்.

அழைப்பிதழ் நிகழ்ச்சி நிரலில் தமிழறிஞர் விருது பெற்ற அருணாசலக் கவுண்டர் மட்டுமே ஏற்புரை வழங்குவதாக இருந்தது. கலைஞர் என்னைப் பார்த்து நான் ஏன் பேசவில்லை என்று கேட்டார். நான் ‘நீங்கள் தான் ‘விரைவில் முடித்துவிட வேண்டும்’ என்று சொன்னீர்களாம்’. என்றேன். கலைஞர் ‘நீங்களும் பேசவேண்டும்’ என்றார். பேசுவதற்கு தயாராக வராததால், அன்று சிறப்பாகப் பேசினேன்.

முதலில், ஔவை நடராசன் அவர்கள் ஒரு இலக்கியச் சொற்பொழிவை நிகழ்த்தினார் - அதுவும் கலைஞர் வழியாக: கலைஞர் ஆக்கிய சங்கத்தமிழ் நூலில் ‘வாளிங்கே - அவன் நாக்கெங்கே? என்ற உரை வீச்சை அப்படியே ஒப்பித்தார். கூட்டம் மெய்மறந்து கேட்டது. கலைஞரின் அந்த கவிதை ஆரவாரமாக இருந்தாலும், அது ஆழமான கடலின் அலைப்பாய்ச்சலாக தோன்றியது.