பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

131



வாளெங்கே’ என்று மாற்றிச் சொல்லிவிட்டார் என்று திருத்தம் கொடுத்தார். கூட்டம் அவரது ஞாபகச் சக்தியை கண்டு வியந்ததுபோல் பலத்து ஆரவாரித்தது. போரில் பெற்ற மகன் புறமுதுகிட்டு இறந்திருந்தால் அவனுக்கு பாலூட்டிய முலைப்பாலை அறுத்தெரிவதற்கு அந்தத் தாய்க் கிழவி எப்படி வீராவேசமாக பேசியிருப்பாளோ அப்படிப் பேசினார் கலைஞர். அப்போது அந்த வீரத்தாயின் ஆண் வடிவமாகக் காணப்பட்டார்.

இது முடிந்ததும், கலைஞர் நான் ஊசி ஏற்றிய வாழைப் பழத்தில் இன்னொரு ஊசியை ஏற்றினார். அமரர் ஆதித்தனார் அவர்களுக்கும், தனக்கும் பல்லாண்டு காலமாக இருந்த நட்புறவை விளக்கினார். ஆதித்தனார் அவர்கள் தனது தலைமையிலான அமைச்சரவையில்தான், முதன் முதலாக அமைச்சராக ஆக்கப்பட்டார், என்பதை ஏதோ சலுகை வழங்குவது போல் கூறாமல், ஒரு நட்புக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக தெரிவித்தார். பின்னர் அமரர் ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாற்றில், தனது நட்பு குறித்தோ அல்லது தனது அமைச்சரவையில் அவர் இடம் பெற்றது குறித்தோ ஒரு வரி கூட இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். அப்போது கூட்டத்தை ஒரு தடவையும், சிவந்தி ஆதித்தன் அவர்களை மறு தடவையும் பார்த்து விட்டு மீண்டும் ‘தம்பி சிவந்திக்கு என் மீது பாசம் உண்டு. ஆனால் அதை வெளிக்காட்ட அப்போதைக்கு பயம்’ என்று அவர் இயல்பாக பேசியபோது கூட்டத்தினர் இயல்பாக இருக்காமல் பலத்து ஆரவாரித்தனர்.

எனக்கு தர்மசங்கடமாகி விட்டது. அவசர குடுக்கையாக இந்த ஒன்றாக்கிப் பார்த்தலை, கூறியிருக்க வேண்டாமோ என்று நினைத்தேன். அதேசமயம் இவர்கள் ஒன்றானால் தான் தமிழகத்தில் நல்லதுகள் விரைவில் நடைபெற்று, அல்லதுகள் ஒரளவுக்காவது மறைய முடியும் என்ற பொது நலன் கருதியே அப்படிப் பேசினேன். ஆனாலும், கலைஞர் அப்படிக் குத்திக் காட்டியது, சிவந்தியின் மனதை புண்படுத்தியிருக்குமோ என்று நினைத்தேன். பொதுவாக, ஒரு பெரியவரை இன்னொரு பெரியவர் ஏதோ ஒரு வகையில் சாடும்போது, அந்தச் சாடலுக்கு காரணமான ஆசாமிதான் ஆப்பசைத்த குரங்காகி விடுவார். இந்த நிலைக்கு நான் வந்து விட்டேன். அதே சமயம் மக்கள் சாட்சியாக சொல்ல வேண்டியதை மனச்சாட்சிபடி சொன்னதில் ஒரு திருப்தியும் ஏற்பட்டது.