பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

141



சண்முகநாதன் கொண்டு வந்த முரசொலியின், முதல் பக்கத்தில், கலைஞர் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்த போது சுயமாய் திரண்ட கூட்டப் பெருக்கை புகைப்படமாக காட்டியது. கலைஞர் பெருமிதமாக ‘சமுத்திரம்! எனக்கு போகிற இடமெல்லாம் நல்ல கூட்டம் வருது... பாத்தீங்களா முரசொலியை . ஆனா பெரிய பத்திரிகைகள் இதை இருட்டடிப்பு செய்கின்றன’ என்றார். பேச்சு வாக்கில் கலைஞர் முதலில் முரசொலியையும், பின்னர் விடுதலையையும் இவற்றிற்கு பிறகுதான் இதர பத்திரிகைகளையும் படிப்பதாக அறிந்தேன். உடனே, நான் இந்த பாணியில் பேசினேன்.

‘சார் காமராசர்... புதிதாக தோன்றிய திமுக சக்தியா பற்றி கவலைப்படாம, ராஜாஜியை மட்டுமே ஒரு பெரிய சக்தியா நினைத்தார். இதனாலதான் அவர் தமிழக அரசியலில் திமுகவிடம் தோற்றார். நீங்களும் போணியாகாத விடுதலைப் பத்திரிகை மேல ஒரு அடிக்சன் வைத்திருக்கிங்க. இது உங்களை யாதார்த்தத்திலிருந்து திசை திருப்புமுன்னு நினைக்கிறேன். முதல்ல அந்த பத்திரிகையை படிக்கிறத விடுங்க சார்’.

‘ஆயிரந்தான் இருந்தாலும் நான் வேலை செய்த பத்திரிகை ஆயிற்றே.’

கலைஞருக்கு, ஜெயலலிதாவிடம் அடிமைப் பட்டுப்போன விடுதலை பத்திரிகையின் பெருங்காய வாசனை போகவில்லை. ‘விடுதலையை பற்றி பேசும் போது அவரது கண்கள் உள்நோக்கிப் போய் கடந்த காலத்தில் கால் நிமிடம் மையம் கொண்டன. மீண்டும் எனது பேச்சு, வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலைச் சுற்றி வந்தது. இன்னின்ன இடங்களில் கலைஞருக்கு ஆதரவு இருக்காது என்பதை சொன்னேன். எனது நோக்கம் கலைஞரை உஷார் படுத்த வேண்டும் என்பதுதானே தவிர ஊக்க குறைப்பிற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டினேன்’

கலைஞரோ எனது கருத்தாக்கம் - எதிர்கருத்தாக்கம் என்ற தத்துவார்த்தப் போக்கை புரிந்தவர் போல் மெல்ல தலையாட்டினார். நான், மீண்டும் மீண்டும் அவருக்கும் கட்சிக்கும், மக்கள் மத்தியில், குறிப்பாக பேருந்து கட்டணங்களை உயர்த்தியதால் ஏற்பட்ட கசப்புணர்வுகளை தெரிவித்தபோது கலைஞர், மனம்விட்டு என்னிடம் ஆணியடிப்பதுப் போல் இந்த பாணியில் பேசினார்.