பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

என் பார்வையில் கலைஞர்



தலையை போட்டுட மாட்டீர்களா என்று எதிர் பார்க்கிற நமது அரசியல் விரோதிகள் அவர்கள். மஞ்சள் துண்டு ஒரு பெரிய விவகாரம் அல்ல. போன வருஷமே உங்களுக்கு ஆயுள் முடியப்போகுதுன்னு நாள் குறித்த எதிரிகளுக்கும் இந்த மஞ்சள் துண்டு மைய பேர்வழிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. எந்த துண்டு போட வேண்டும் என்பது உங்கள் உரிமை. இதை குறை கூறுகிற எவரும் ஒரு காட்டுமிராண்டிதான்’ என்று பொரிந்து தள்ளி, அந்த விவகாரத்திற்கு அங்கேயே முற்றுப்புள்ளி வைத்தேன்.

கலைஞர் என் கருத்தை ஆட்சேபிக்கவும் இல்லை. அங்கீகரிக்கவும் இல்லை. சின்ன சிரிப்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்தார்.

பல்வேறு அரசியல் - சமூக விவகாரங்கள் குறித்து கலைஞரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவரும் வெளியே சொல்ல முடியாத சில விவகாரங்களை என்னிடம் விளக்கினார். நான் நெகிழ்ந்து போனேன். அவர் அப்போது கூறியவை எல்லாம் பின்னர் சம்பவங்களாகவும், செய்திகளாகவும் வெளிப்பட்டன. நான் என்னையே நம்ப முடியாமல் கலைஞரை நம்பிய படியே பார்த்தேன். இந்த துஷ்ட பிள்ளையிடமும் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை, என்னை மலைக்க வைத்தது.

பின்னர், கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் உள்ள வைகுண்டசாமிக்கு ஒரு நல்ல கோட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டேன். இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தின் எளிய மக்கள் அனைவரும் வைகுண்டர் பக்கம் நிற்பார்கள் என்றேன். உடனே கலைஞர் ‘மெர்கண்டைல் வங்கி விவகாரத்தை நல்ல முடிவுக்கு கொண்டு வரப்போகிறேன் சமுத்திரம்’ என்றார். உடனே நான் ‘ஓட்டுப் போடக் கூட போகாத பணக்காரர்களுக்கு நீங்கள் செய்வது எப்படியோ.. ஆனால், வைகுண்ட சாமியை மேன்மைப் படுத்தினால் எளிய மக்கள் குறிப்பாக பனையேறி மக்கள், உங்கள் பக்கம் கட்டுக் கோப்பாக நிற்பார்கள். அதோடு வைகுண்டர் வள்ளலாருக்கும், நாராயண குருவிற்கும் முன்பே மாபெரும் புரட்சியாளராக இருந்தவர்’ என்று குறிப்பிட்டேன். கலைஞரும் தமிழக அறநிலையத் துறை அமைச்சர், தமிழ்க் குடிமகன் அவர்களை, சாமித் தோப்பிற்கு சென்று முதலில் பார்வையிடச் சொல்வதாகக் குறிப்பிட்டார்.