பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XIV


அகில இந்திய தகவல் துறை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன். என்னை இழிவு படுத்திய ஒரு தமிழ் பிராமண அதிகாரியை சங்கம் இழிவு படுத்தப் போனபோது அதை தட்டிக் கேட்டு எனது அந்தரங்கக் குறிப்பேட்டை எழுதும் தலைமை அதிகாரியை பகைத்துக் கொண்டவன் நான்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு எனது சாதியை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், ஒரு சங்கத்தை திருமிகு. சிவந்தி ஆதித்தன் அவர்கள் தலைமையில் உருவாக்கியபோது அந்தக் கூட்டத்தில் வேறொரு காரணத்திற்காக சென்றிருந்த நான் கட்டாயமாக பேச வேண்டியதாயிற்று. அப்போது, ‘பணக்கார நாடார், பணக்கார பிராமணரோடு சேரும்போது ஏன் ஏழை நாடார், எழை பறையரோடும், பார்ப்பனரோடும் சேரக்கூடாது என்று’ அதிரடியாய் பேசியவன். சிவந்தி அவர்களின் மனதையும் நோகடித்தவன். இவ்வளவுக்கும், அவரது ராணியிலும், ராணிமுத்துவிலும் அவர் எனக்கு ஊக்கமளித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் இப்படி பேசினேன்.

இதேபோல் என்னை திடீர் எழுத்தாளனாக்கிய பெருமை ஆனந்த விகடனுக்கே சாரும். அடுத்தடுத்து எனது கதைகளை பிரசுரித்து என்னைப் பிரபலப்படுத்தியது. அதே விகடன் தனது ஜூனியர் விகடன் மூலம் என்னையும், நான் பணியாற்றிய தொலைக்காட்சியையும் சம்பந்தப்படுத்தி இழிவாக எழுதியபோது விகடனை நீதிமன்றத்திற்கு இழுத்தவன் நான். இதன் ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவர்கள், நான் அந்த கட்டுரைக்கு மறுப்புத் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்ட போதும், அதை மறுத்தவன் நான். இதனால், பல்லாண்டுகள் விகடனில் என் கதைகள் வெளியாகவில்லை. இவ்வளவுக்கும் விகடன் ஆசிரியருக்கும், அந்த கட்டுரைக்கும் சம்பந்தமில்லை என்று அறிந்தேன். வேறு ஒரு எழுத்தாளராக இருந்தால் விகடன் ஆசிரியர் வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு அனுதாப அலையை எழுப்பி விகடனில், தனது கதைகளை திணித்திருப்பார். எனக்கு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்த போதுதான் எனது நன்றியுணர்வும், விகடன் ஆசிரியரின் பெருந்தன்மையும் ஒரு மையத்தில் சந்தித்தன.

1982 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, தமிழக அரசின் சார்பில் நான் எழுதிய ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற நாவலுக்கும் ‘குற்றம் பார்க்கில்’ என்ற சிறுகதைக்கும் ஒரே ஆண்டு இரண்டு முதல் பரிசுகள் கிடைத்தன. எம்.ஜி.ஆரே, தன் கைபட அவற்றை வழங்கினார். இந்தப் புகைப்படமும், இன்னொரு புகைப்படம் மட்டுமே அரசு சார்பில் பத்திரிகைகளுக்கு அனுப்பப் பட்டன. ஆனாலும், தேவி பத்திரிகை என்னை பேட்டிக் கண்டபோது ‘இது மக்கள் வரி பணத்தில் வந்த பரிசுகள், ஆகையால்