பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

என் பார்வையில் கலைஞர்



எனவே, கலைஞரை வைத்து இந்த பேரவையைத் துவக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். இதற்கான தேதியை கலைஞரிடம் இருந்து பெற்றுக் கொள்வது என்னுடைய பொறுப்பாயிற்று. மீண்டும் சண்முகநாதன் அவர்களோடு தொடர்பு கொண்டேன். அவரோ ‘தலைவர் ரொம்ப பிசியாயிருக்கார். இப்ப வாரது கஷ்டந்தான். எதற்கும் சொல்லிப் பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டார். விரைவில் வரவிற்கும் நாடாளுமன்றத் தேர்தல்களையும், தேர்தல் பிரச்சாரத்தையும் மனதிற்கொண்டு அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். நான், மேற்கொண்டும் சண்முகநாதன் அவர்களை காலை ஆறுமணிக்கே தொல்லைபடுத்த விரும்பவில்லை.

திராவிட இயக்கத்தின் கருவறைப் பத்திரிகையாக, அண்ணாவை ஆசிரியராக கொண்டு இயங்கிய நம் நாடு பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றியவரும், கொள்கை பிடிப்பிலிருந்து மாறாதவருமான கவிக்கொண்டல் மா. செங்குவட்டுவன் அவர்களை அணுகினேன். அவர் அறிவாலயத்தில் உள்ள ஆயிரம் விளக்கு உஷேன் அவர்களிடம் என்னை அழைத்துச் சென்றார். கோபலபுரத்தில் பேச முடியாத கலைஞருடன், அறிவாலயத்தில் பேசவேண்டும் என்பதை அவரிடம் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிவிட்டேன். அவரும் காத்திருக்கும்படி சொன்னார்.

கலைஞர் அறிவாலயத்திற்குள் நுழைந்து, தனது அறையை நோக்கி நடந்தபோது, அத்தனை பேரும் கட்டுப்பாடாக வரிசையாக நின்றார்கள். ஒருவர் குறுக்கே நின்ற என்னை வரிசையில் நிற்கும்படி சொன்னார். நானும் அப்படியே நின்றேன். என்னுடைய நோக்கம், கலைஞருக்கு அங்கேயே என் வருகையை தெரிவித்து விட வேண்டும் என்பது. வரிசைக்குள் சிக்கியதால் இந்த நோக்கம் நிறைவேறுமா என்பது தெரியவில்லை. ஆனாலும், கலைஞர் என்னைப் பார்த்து விட்டார். அரை நிமிடம் நின்று ‘அடடே சமுத்திரமா! ஏது இந்தப் பக்கம் என்றார். உடனே, நோக்கத்தைச் சொல்லிவிட்டால் கலைஞர் அங்கேயே அனுப்பி விடுவார் என்று நினைத்து ஒரு விஷயமா உங்களைப் பார்க்கணும்’ என்று பொத்தம் பொதுவாக சொன்னேன்.

கலைஞர், தனது அறைக்குள் நுழைந்த ஐந்து நிமிடங்களில் முதலில் என்னைத்தான் அழைத்தார். நான், பேரவையை கலைஞர் துவக்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இந்த