பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

163



அவர் முழுமையாக பகிர்ந்து கொண்டது போல் தோன்றியது. என்னை நம்பிக்கைகுரிய, அதே சமயம் சந்தா செலுத்தாத கழகக் கண்மணியாக ஏற்றுக் கொண்டதில் ஆனந்தம் அடைந்தேன். வள்ளலார் பேரவையை துவக்கி வைப்பதற்கு ஜூலை மாதம் ஏழாம் தேதி மாலை நேரத்தை ஒதுக்கித் தந்தார் கலைஞர். பேச்சாளர் பட்டியலைப் பற்றி அப்போதும் அவர் என்னிடம் கேட்கவில்லை.

வள்ளலார் விரித்த கடைக்கு கொள்வாரை அழைக்கிறார் கலைஞர் என்ற முத்திரையோடு அழைப்பிதழும், சுவரொட்டிகளும் தயாரிக்கப்பட்டன. நான் ஜூலை மாத முதல் வாக்கில் கலைஞருக்கு அழைப்பிதழ் எடுத்துச் சென்றேன். ஏற்கெனவே கலைஞரை பார்த்து தேதி வாங்கி விட்ட நான் அவரை அடிக்கடி தனியாகச் சந்தித்து அவரது நேரத்தை வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தில், வரவேற்பு அறையிலேயே கலைஞருக்காக காத்து நின்றேன். என்னை விட பலமடங்கு சர்வவல்லமை உள்ள பார்வையாளர்கள், முன் அனுமதி பெற்று, கலைஞரை மாடியில் ஏறி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஒவ்வொருவரையும் அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்குள் கலைஞர் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். ஆனால், எனக்கோ குறைந்தது பத்து நிமிடமாவது ஒதுக்கியவர். நேரமாகிவிட்டாலும் அவர் வாயில் இருந்து புறப்படுங்கள் என்ற வார்த்தை வராது.

கலைஞரும் காலை பத்து மணியளவில் படியிறங்கினார். நான் அங்கே நிற்பேன் என்று அவர் எதிர்பார்க்க வில்லை. அழைப்பிதழோடு வந்திருப்பேன் என்பதும் அவருக்கு தெரிந்திருக்காது. ‘வாங்க அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா.’ என்றார். நான் ஒன்றும் புரியாமல் விழித்தபோது ‘நீங்க தினமணி கதிரில் தலைப்பிரசவத்தில் எழுதிய கட்டுரையைத் தான் சொல்கிறேன். நல்லா இருந்தது’ என்று தாளலயமாய் தலையாட்டி பாராட்டினார்.

நான் புல்லரித்துப் போனேன். சக படைப்பாளிகள் பிறபடைப்புகளை படிப்பதில்லை. ஒரு பிரபல எழுத்தாளர், தான் எவரது படைப்பையும் படிப்பதில்லை என்று மார்தட்டிக் கொள்வார். இந்தப் பின்னணியில் முதல்வர், கட்சித் தலைவர், குடும்பத் தலைவர், இலக்கியவாதி என்று பல்வேறு சுமைகளை சுவையாக தாங்கிக் கொண்டிருக்கும் ஒருவர், ஒரு சாதாரண சமுத்திரத்தின் கட்டுரை முழுவதையும் படித்து விட்டு அதை