பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

என் பார்வையில் கலைஞர்


போட்டார். செல்லக் குட்டு வைக்கப் போகிறார் என்பது கூட்டத்திற்கும் எனக்கும் புரிந்தது. அவர் என்னைப் பற்றி எப்படி அவதான்ித்து இருக்கிறார் என்பதை அறிவதில் எனக்கும் ஒரு எதிர்பார்ப்பு. கூடவே, குட்டு பலமாக இருந்துவிடக் கூடாதே என்கிற பயம், இருக்காது என்கிற நம்பிக்கை. ஆனாலும் கலைஞர் அப்படி பேசப் போவதை தொடரவில்லை.

எடுத்த எடுப்பிலேயே சூடான அரசியலில் இருந்து தன்னை இங்கு கொண்டுவந்து அறிஞர்களின் பேச்சு மழையில் நனையை வைத்த எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். சட்டம் தமிழ் சிந்தனையாளர்களாலும், வெளியூரில் இருந்து திரண்ட வள்ளலார் நேயர்களாலும் நிரம்பி இருப்பதை புரிந்துக் கொண்டார். பிரம்மனின் முகத்தில் பிறந்தவர்கள் அமைதியாக இருக்கும் போது, காலில் பிறந்தவனும், பாதத்தில் பிறந்தவனும் மோதிக் கொள்கிறார்களே என்று வருத்தம் தெரிவித்தார். இந்த பின்னணியில் வள்ளலாரை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே வள்ளலாரை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

கலைஞர் மேலும் பேசுகையில், அர்ச்சுனன் மரத்தில் இருந்த கிளியை மட்டுமே பார்த்தது போல, நாமும் நமது குறிக்கோளை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். சில வள்ளலார் பிரியர்களுக்கு, இது வருத்தத்தை அளித்தது. நான் ஏகலைவனைப் பற்றிச் சொல்லும் போது அவரோ அவனைப் பழிவாங்கிய அர்ச்சுனனைப் பற்றி குறிப்பிடுகிறார் என்று பின்னர் என்னிடம் தெரிவித்தார்கள். ஆனால், நோக்கம் இதுவல்ல. ஏகலைவனும், அன்று அர்ச்சுனனைப் போல் வில்வித்தையில் மட்டுமே குறியாக இருந்திருந்தால் அவன் கட்டை விரலை எந்த ஆச்சாரியாரும் எடுத்திருக்க முடியாது என்ற பொருளிலேதான் கலைஞர் கோடி காட்டினார். வீண் ஆராவாரங்களிலும், சாதிய சண்டைகளிலும் மூழ்கிப் போகாமல் பிரம்மனின் காலில் பிறந்தவர்களும், பாதத்தில் பிறந்தவர்களும் முகத்தில் பிறந்தவர்களுக்கு இணையாக குறிக்கோளில் குறி தவறாது நிற்க வேண்டும் என்பதையே கலைஞர் எடுத்துரைத்தார். கூட்டமும் அறிஞர் பெருமக்களால் நிரம்பப் பட்டதால் இதை விளக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. விலாவாரியாக விளக்குவதற்கு அவர் சாதாரணமானவரும் அல்ல. தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் பொதுமைப்படுத்தி நடக்க வேண்டியவர்.