பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

169



கலைஞர், முதல்வராக இருந்த போது, அவர்தான் என்னை வானொலியில் இருந்து தொலைக்காட்சிக்கு செய்தி ஆசிரியராக மாற்றினார் என்பதை வாசகர்களிடம் ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அந்தச் சமயத்தில், இதயம் பேசுகிறது ஆசிரியர் மணியன், நான், ராசாத்தி அம்மாவின் சாதியை சேர்ந்தவன் என்பதால், அவரே கலைஞரிடம் என்னை தொலைக்காட்சியில் நியமிக்க வேண்டும் என்று நிர்பந்தித்து வெற்றி பெற்றதாக எழுதியிருந்தார். இது மணியன் அவர்களின் தகுதிக்கே குறைவான செயல்.

ராசாத்தி அம்மாவுக்கு என்னை தெரிந்திருக்க முடியாது. ஒருவேளை, கனிமொழி சம்பந்தமாக கலைஞரிடம் நான் உரையாடியதை, அவர் தனது துணைவியாருடன் சொல்லி இருக்கலாம். ஆனாலும், ராசாத்தி அம்மாவுடன் எனக்கொரு மானசீகமான அன்பு உண்டு. இதயம் பேசுகிறதில் வந்த செய்தி, ஒருவேளை உண்மையாக இருக்கலாமோ என்றுகூட நம்பத் துவங்கினேன். ஒருவர் நமக்கு பிடித்தமானவராய் ஆகும்போது, அவர் நமக்கு நல்ல காரியம் செய்வதாக கூறப்படும் போது, அது செய்யப்பட்டதோ, செய்யப்படவில்லையோ, சம்பந்தப்பட்டவர், அப்படி செய்ததாகவே நம்புவார். நடப்பதை மட்டும் நம்ப வேண்டும் என்பது இல்லை. நடந்திருக்கும் என்றும் நம்பலாம். இதுதான் மனோதத்துவத்தில் ஒரு அடிப்படை விதி.

இந்தச் சூழலில், கலைஞர், இரண்டாவது தடவையாக முதல்வராய் பொறுப்பேற்றவுடன் சென்னை தொலைக் காட்சியில் ஒரு கவியரங்கத்திற்கு தலைமை தாங்கினார். கவியரங்கம் நிலைய அரங்கிற்குள்ளேயே நடந்தது. அங்கே வரும் ராசாத்தி அம்மாவை வரவேற்று அவருக்குரிய இருக்கைக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டும் என்பது எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு. இந்தப் பொறுப்பைக் கொடுத்தவர்கள் கூட இதயம் பேசுகிறது செய்தியை நம்பித்தான் கொடுத்து இருக்கலாம் ராசாத்தி அம்மா வந்த போது நான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். என் பெயரைக் கேட்டதும், அவர் ஏறிட்டுப் பார்த்து புன்னகைச் செய்வார் என்று நினைத்தேன். அவருக்கு என்னைத் தெரியவில்லை. ஒப்புக்கும் அவர் தலையாட்ட வில்லை. இது எனக்கு அவமானமாக தோன்றியது.