பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

என் பார்வையில் கலைஞர்



திசைத்திருப்பி விடலாமே என்ற எதிர்கால அச்சம். பொதுக்குழு கூட்டம் முடிந்ததும், சிலர் நான் குறுக்கிட்டதுதான் சரி என்றார்கள். சிலர் இவை எல்லாம் சொல்லாமல் செய்ய வேண்டிய செயல்கள் என்றார்கள். நான் கலைஞர் தவறாக நினைப்பாரே என்று வருந்தினாலும் நான் அப்படி கருத்து தெரிவித்ததில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

சங்கப் பலகையின் பொதுக் குழு உறுப்பினர்களில் இருந்து செயற்குழுவிற்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். போட்டி இல்லாத தேர்வு. பேராசிரியர் மெய்யப்பன், சங்கப் பலகைக்கு காரணமானவர் என்று சொல்லி என் பெயரை முன்மொழிந்தார். உறுப்பினர்கள் ஆட்சேபிக்கவில்லை. சிலம்பொலி செல்லப்பன், சா. வே. சுப்பிரமணியன், அப்துல் ரகுமான், காவ்யா சண்முகச் சுந்தரம் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் என்பதை விட பொதுக் குழுவால் நியமிக்கப் பட்டார்கள் என்று சொல்லலாம்.

காலங்காலமாக அடிமைப் படுத்தப்பட்ட அல்லது கொச்சைப்படுத்தப் பட்ட இந்த மண்ணின் இலக்கியத்தை பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்ல, இத்தகைய தடாலடி குறுக்கீடு தேவை என்றே தோன்றியது. ஆரம்பகாலத்தில் என் படைப்புகளை மக்களுக்கு கொண்டு சென்றவரும் என்னை சங்கப்பலகையின் செயற்குழுவிற்கு உறுப்பினராக வழிமொழிந்தவருமான பேராசிரியர் மெய்யப்பன் தமிழண்ணல் அவர்களுக்கு மிகவும் வேண்டியவர். நான் தமிழண்ணல் அவர்களிடம் ஒருவேளை அவர் மனம் புண்படும் படி நடந்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தபோது பேராசிரியர். மெய்யப்பன் நான் அப்படிச் செய்ததே சரி என்று அங்கேயே வாதிட்டார். இதுதான் நட்பையும் மீறிய நேர்மை என்பது.

கலைஞரும், தனக்கே உரிய முத்திரையோடு தமிழ் இலக்கியத்தைப் பற்றியும், அதை உலகளாவ கொண்டு எடுத்து செல்ல வேண்டிய அவசியத்தையும் அருமையாக வற்புறுத்தினார்.

நான் கலைஞருடன் கொண்ட நட்பை வாழ்நாள் வரை கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவன். எனது இடைச்செருகல் பேச்சு இதற்கு இடையூறாக வந்திருக்குமோ என்று வருத்தப்பட்டேன். அதற்கு அவசியம் இல்லை என்பது போல் ஒரு நிகழ்ச்சி விரைவில் நடைபெற்றது.