பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XVI


ஒரு பெண் ஐ.பி.எஸ் எழுத்தாளர் நீதிமன்றத்தில் எனக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார். நீதிமன்ற விசாரணைகளுக்கு அவர் அரசு வாகனங்களிலேயே வந்தார். இதை ஆட்சேபித்து அப்போது உள்துறை செயலாளராக இருந்த பூரணலிங்கம் அவர்களிடம் ஒரு மனு கொடுத்தேன். இவர் எனது இனிய நண்பர். அவர், அந்த அம்மாவை அங்கேயே வரவழைத்து வழக்கை வாபஸ் வாங்கச் செய்வதாக குறிப்பிட்டார். அவரும் தனது நண்பர் என்பதால் அதை தட்டமாட்டார் என்றும் குறிப்பிட்டார். ஆனாலும், நான் மறுத்துவிட்டேன். எனது வாதியை அவரது மேலதிகாரியை வைத்து நிர்பந்திக்க நான் விரும்பவில்லை.

நான் தமிழ் தேசியத்தின் பக்கம் நிற்பவன். ஆனாலும், தமிழ் பேரினவாதத்தையோ, விடுதலைப்புலிகளையோ என்னால் ஆதரிக்க இயலவில்லை. மனச்சாட்சியை தூக்கிப் போட்டுவிட்டு ஆதரித்து இருந்தால் இந்நேரம் உலகத்தில் எதோ ஒரு நாட்டில் பேசிக்கொண்டிருப்பேன். இதன் மூலம் அருமையான நண்பர்களை கூட இழந்திருக்கிறேன்.

மத்தியில் அரசு ஊழியர்கள் நலனை கவனித்து வந்த அப்போதைய அமைச்சரான என் இனிய தோழர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் அவர்கள் எனக்கு பதவியில் நீட்டிப்புக் கொடுக்க முன்வந்தார். அதை மென்மையாக மறுத்தவன் நான்.

இவை, என்னைப் பற்றி எனக்குத் தெரிந்த விவரங்கள். வாசகர்கள் இந்த நூலின் நம்பகத்தன்மையை இதன் மூலம் எப்படி வேண்டுமானாலும் தீர்மானிக்கட்டும்.

இந்த நூல் குறித்து வாசகர்கள் தங்களது மேலான கருத்துக்களை எனக்குத் தெரிவித்தால் எனக்கு உதவியாக இருக்கும். கலைஞரைப் பற்றி இரண்டாவது பகுதி எழுதப் போகும்போது இந்த திருத்தங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.

இந்த நூலை அருமையாக அச்சிட்டுக் கொடுத்த மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர் பேராசிரியர் ச.மெய்யப்பன், அதன் நிர்வாகிகளான சோமு, குருமூர்த்தி ஆகியோருக்கும் என மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.