பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

183



மௌனத்திற்கான சூழல் எனக்கு புரிந்தது. இந்த அதிர்ச்சி தரும் செய்தியை, கலைஞர் என்னிடம் பகிர்ந்து கொண்டது என்னைப்பற்றி நான் பெரிதாக நினைக்க வைத்தது. ஜி.கே. எம் அவர்களிடம் பேசிப் பார்க்கலாமா என்றேன். அவர் எனக்கு இளம் வயதிலிருந்தே தெரியும் என்பதையும், நான் சொல்வதை கவனமாகக் கேட்பார் என்பதையும் குறிப்பிட்டேன். கலைஞர் சிரித்துக் கொண்டார். மறுப்புக் கூறவில்லை. வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்பதுதான் அந்தச் சிரிப்பின் பொருள்.

எங்கள் உரையாடல் சாகித்திய அக்காதெமியின் பக்கம் திரும்பியது. இந்த அக்காதெமி எப்படி எல்லாம் மேட்டுக் குடிக்கு ஏதுவாக செயல்படுகிறது என்பதை ஏற்கெனவே தெரிவித்து விட்டேன். மேட்டுக் குடி தாச எழுத்தாளர் ஒருவருக்கு, இந்த அமைப்பு ஐந்துப் பொறுப்புகளை தொடர்ந்து கொடுத்து வந்தது. இவர் தொகுத்து அண்மையில் வெளியான நவீன தமிழ்ச் சிறுகதைகளில் திராவிட இயக்க படைப்பாளிகளோ, குறிப்பாக சொல்லும்படியான கலைஞரின் குப்பைத் தொட்டியோ அல்லது சு.சமுத்திரம், கு.சின்னப்ப பாரதி, பொன்னீலன், டி. செல்வராஜ், மேலாண்மை பொன்னுச்சாமி என்ற முற்போக்கு வரிசை படைப்போ இடம் பெறவில்லை. இந்த லட்சணத்தில் இதே எழுத்தாளருக்கு சென்ற நூற்றாண்டின் சிறுகதைகளை தொகுக்கும் பொறுப்பையும், அக்காதெமி கொடுத்ததில் துடித்துப் போனேன்.

இந்தப் பொறுப்பை அவர் காய்தல், உவத்தல் இல்லாமல் செய்யமாட்டார் என்பது தெரியும். ஆகையால், குமுதம், குங்குமம் போன்ற பத்திரிகைகளில் இந்த இலக்கிய கொடுங்கோன்மையை கண்டித்து எழுதினேன். முதுபெரும் எழுத்தாளரான வல்லிக்கண்ணன் தலைமையில் எழுத்தாளர் கூட்டணி ஒன்றை உருவாக்கி கூட்டம் போட்டு கண்டித்தோம். இந்த விவரத்தை கலைஞரிடம் நான் தெரிவித்தபோது, குங்குமம் பத்திரிகையில் வந்த கட்டுரைகளை படித்ததாக குறிப்பிட்டார். பெரும்பாலும் எனது கருத்து அவருக்கு ஏற்புடையதாகவே இருந்தது. சாகித்திய அக்காதெமியின் இத்தகைய போக்கை கண்டித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் முனைவர். தமிழ்க் குடிமகன் அவர்கள் மூலம் மத்திய அரசிற்கும் அந்த அக்காதெமிக்கும் கடிதம் எழுதும்படி, நான் கேட்டுக் கொள்ளலாமா என்று வினவியபோது கலைஞர் சரி என்று ஒப்புக் கொண்டார்.