பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

என் பார்வையில் கலைஞர்



இத்தகைய முயற்சிகளாலும், எங்கள் போராட்டத்தாலும் சம்பந்தப்பட்ட அந்த எழுத்தாளரோடு மேலும் இரண்டு பேரை நியமித்து ஒரு குழு அமைக்கப்படுவதாக தெரிகிறது. இதனால், தமிழ் இலக்கியத்தை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றிய பெருமிதம் ஏற்படுகிறது. திராவிடப் படைப்பாளிகளுக்கு முதல்முறையாக இலக்கிய நீதி வழங்கப்படுகிறது.

இறுதியாக எங்கள் பகுதி சென்னை மாநகர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் ஒரு உதவிப் பொறியாளரைப் பற்றியது. இவர் ஒரு தொழிற்ச்சங்கத் தலைவராம். இயக்கரீதியில் இல்லாத லும்பத்தனமான தலைவர் என்பதால், இவர் பொதுமக்களை வரி செலுத்துவோராக நினைக்காமல் கப்பம் கட்டுபவராகவே நினைத்தார். எங்கள் தெருவாசிகளில் எழுத்து மூலமான வேண்டுகோளைப் பற்றி ஒப்புக்குக்கூட ஒரு பதில் அளிக்கவில்லை. வாரியத்தில் கேட்டாலோ அவராக செய்தால் உண்டு. அவரை யாரும் அப்படிச் செய்யச் சொல்ல முடியாது என்று இயலாமமையில் தெரிவித்தனர். கலைஞர் அரசு நல்லதை செய்ய நினைத்தாலும் அதை எப்படி ஒரு அதிகாரியால் முறியடிக்க முடிகிறது என்பதை நேருக்கு நேராகப் பார்த்தேன். இதைக் கலைஞரிடம் தெரிவிக்க நினைத்தேன். பல நண்பர்கள் ஒரு முதல்வரிடமா இத்தகைய சின்னப் பிரச்சனையை குறிப்பிடுவது என்று வினவினார்கள். ஆனால், எனது தோழர் செந்தில்நாதன் கலைஞர் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டார் என்று குறிப்பிட்டு ஊக்கமளித்தார்

நான் ஒரு குறிப்பு எழுதிக் கொண்டேன். அதில், கிருஷ்ணா நதி நீர் திட்டத்தைப் பற்றி கவலைப்படும் முதல்வரிடம் ஒரு தெருவின் தண்ணீர் விநியோகம் பற்றி குறிப்பிடுவதற்கு வருத்தம் தெரிவித்தேன். பின்னர் அடித்தள மக்களின் உரிமைப் போராட்டமான குழாய் நீர் பகிர்வை, மேட்டுக்குடியினர் குழாய்ச் சண்டை என்று கொச்சைப் படுத்தியதைச் சுட்டிக்காட்டி, மக்கள் முதல்வரான கலைஞர், அப்படி எடுத்துக் கொள்ளமாட்டார் என்ற முன்னுரையுடன் விவரம் தெரிவித்திருந்தேன். இந்த குறிப்பைக் கொடுக்கும் போது எனக்கு கைகள் லேசாக ஆடின. ஆனால், கலைஞரோ இதை இயல்பாக எடுத்துக் கொண்டார்.

வீட்டுக்குத் திரும்பிய மூன்று மணி நேரத்தில் நேர்மையாளரான நிர்வாக இயக்குநர் சிபிசிங் என்னோடு தொடர்பு கொண்டார். நான் அவரைச் சந்தித்தேன். அவருக்கும் தன்னை மிரட்டிக் கொண்டிருந்த சபாடிர்னேட் ஒருவரிடமிருந்து விடுதலை கிடைத்த மகிழ்ச்சி.