பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

191


மேன்படுத்த வேண்டும் என்பதில் சுழல்வதை மக்கள் புரிந்து கொண்ட அளவிற்கு கட்சிக்காரர்களும், அரசு கட்டமைப்பும் புரிந்துக் கொள்ளவில்லையே என்பதுதான் இன்றைய சோதனை. இதற்காக மக்கள் கலைஞரை சிலுவை சுமக்க விடமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

கலைஞரை சந்தித்த நாட்களை நான், தோரயமாகத்தான் போட்டிருக்கிறேன். எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இல்லை. ஒரு முதல்வரை பற்றிய சந்திப்பு தேதிகளை கூட தெரியாமல் வைத்திருப்பது தவறுதான். அவரோடு சந்தித்த போதெல்லாம் நான் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதில்லை. இது கவனக் குறைவு அல்ல. கவனமாக மேற்கொண்ட ஒரு பண்பாடுதான். இந்த சந்தர்ப்பத்தில் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். எதிர் வரும் தேர்தல்களில், கலைஞர் தோற்பார் என்றும், அப்போது அவர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், சிலர் தாறுமாறாக பேசிவருகிறார்கள்.

கலைஞர் வெற்றி பெற்றால் அது ஐந்தாண்டுகாலமாக நாம் அனுபவித்து வரும் சுதந்திரத்தை வலுப்படுத்துவதாக இருக்கும். ஒருவேளை அந்த வாய்ப்பு நமக்கோ கலைஞருக்கு கிடைக்காது போய் ஆதிக்கச் சக்திகள் தலைவிரித்து தாண்டவமாட முனையும். இதுவே தமிழகத்தில் இரண்டாவது விடுதலைப் போராட்டத்தின் துவக்கமாக இருக்கும்.

இந்தப் போராட்டத்தில், தமிழ் தேசியர்களும், பேரினவாதிகளும் கலந்துக் கொள்வது சந்தேகமே. கலைஞரின் உள்வட்ட இலக்கியவாதிகளும், வெளிப்படையாக எழுத்தால் போராடுவதும் ஒரு கேள்விக் குறியே. ஆனால், சுயமரியாதைத் தமிழன் என்ற முறையிலும், தமிழ் எழுத்தாளன் என்ற வகையிலும் -

நான் சொல்லாலும், செயலாலும் தொடர்ந்து போராடுவேன்.