பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

23


இவரது ‘டோன்’ மூலம் அறிந்து கொள்ளலாம் என்பார்கள். என் மீது மிகவும் அன்பு வைத்திருப்பவர். ஒரு வாரத்திற்கு முன்பு கலைஞரை சந்திக்க இவரை அணுகினேன். நான் எதிர்பார்த்தது போல் அனுமதி விரைவில் கிடைக்காததால் எனது நண்பர் ஆலடி அருணா அவர்களை அணுகினேன். அவர் நடவடிக்கை எடுப்பது வரைக்கும் காத்திருக்க முடியாமல், மீண்டும் சண்முகநாதனை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். உடனே அவர் ‘சமுத்திரம் சார்! முதல்வர் அலுவலகத்தில் உங்களுக்கு இருக்கிற ஒரே நண்பன் நான் தான்... எனக்குத் தெரியாதா கலைஞர் கிட்ட ‘எப்போ பேசி எப்போ வாங்கணும் என்று,’ என்றார். நான் வருத்தம் தெரிவித்தேன். கூடவே அவசரம் என்றேன். அவர் ஒரே நண்பர் என்று சொன்ன ஒற்றை வார்த்தையில் எனக்கும் கலைஞருக்கும் இடையே உள்ள உறவின் கடந்த காலமே உள்ளடங்கி இருப்பதைத்தான் அவர் கோடி காட்டினார்.

சண்முகநாதன் உட்கார்ந்திருக்கும் அறைக்கு எதிர்ப்பக்கம் உள்ள பகுதியில் ஒரு நாற்காலியில் நான் உட்கார்ந்தேன். இன்னும் பலர் அங்கே உட்கார்ந்து இருந்தார்கள். சில புதிய முகங்கள். பல பழைய முகங்கள். இந்த இரண்டாவது வகை முகங்களைப் பார்த்ததும், நான் ஓரளவு வெட்கினேன். அந்த முகங்களும் ‘உனக்கு இங்கே என்ன வேலை’ என்று கேட்காமல் கேட்பது போல் தோன்றின. குறிப்பாக ஆர்.டி. சீதாபதி அவர்கள் அன்றைக்குப் பார்த்து வந்திருந்தார். என் வணக்கத்திற்கு அவர் இயல்பாகவே பதில் வணக்கம் போட்டார். ஆனால் அவருக்கு வணக்கம் போடும் போது என் கை லேசாக ஆடியது. காரணம் கலைஞருக்கும் எனக்கும் ஏற்பட்ட மோதல்களும் முரண்பாடுகளும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

கலைஞருக்கு என்னைப் பற்றி முழுமையாகத் தெரியும் என்பதால் நான் குற்ற உணர்வில் தவிக்க இல்லை. ஆனாலும், ஒருவர் தான் எப்படிப்பட்டவர் என்பதை தனது உணர்வுகளால் தீர்மானிக்கிறார். ஆனால், மற்றவர்களோ அவரை அவரது செயல்களால் தீர்மானிக்கிறார்கள். உணர்வுகளும் செயல்பாடுகளும் பிறருக்கு முரண்பாடுகளாக தெரியும் போது தவறான கருத்துக்கு வாய்ப்புகள் உண்டு. இந்த வாய்ப்புக்களை அங்கிருக்கும் நண்பர்களுக்கு நிறையவே கொடுத்திருப்பேன். காரணம் கலைஞரிடம் நான் சண்டைப் போட்டது மட்டுமே அவர்களுக்குத் தெரியும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட உறவு மாற்றம் அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.