பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

என் பார்வையில் கலைஞர்


விளம்பர அலுவலக அதிகாரியும் இப்போதைய திரைப்பட தணிக்கை அதிகாரியுமான தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இந்த விழாவில் திருஷ்டி போல் ஒரு நிரடலும் ஏற்பட்டது. எனது ஏற்புரையில் முன்னைய சட்டப்பேரவையில் ஒருதடவை இப்போதைய பேரவைத் துணைத் தலைவர் பரிதி இளம்வழுதி வன்முறைக்கு ஆளான போது ‘உனக்கும் காலம் வருண்டா’ என்று குறிப்பிட்டதாக தெரிவித்தேன். பேச எழுந்த கலைஞர் பேச்சாளர்கள் பட்டியலில் உள்ளவர்களையும், பார்வையாளர்கள் மத்தியில் இருந்த அமைச்சர்களையும் வெறுமனே பெயரிட்டு அழைத்துவிட்டு ‘மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பரிதி இளம்வழுதி அவர்களே’ என்று அழைத்தார். மற்ற அமைச்சர்களின் பெயர்களைச் சொன்ன போது கைத்தட்டாத கூட்டம் பரிதியை மாண்புமிகுவாக ஆக்கியதும் பலமாக கைத்தட்டியது.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. விழா முடிந்ததும் நண்பர்களிடம் விசாரித்தால் நான் சட்டப்பேரவைத் துணைத் தலைவரான பரிதியை அப்படி ‘டா’ போட்டுப் பேசியதைக் குறிப்பிட்டு இருக்கக் கூடாது என்று சொல்லி வைத்தது போல் அத்தனை பேரும் சொன்னார்கள். இதை மனதில் வைத்துத்தான் கலைஞர் மாண்புமிகு வார்த்தையை சேர்த்தார் என்றும் குறிப்பிட்டார்கள். கூட்டத்தினருக்கும் இது எப்படியோ புரிந்து விட்டது. கலைஞர் பேசியதை வைத்து அவர்களுக்கு அப்படி புரிந்ததா அல்லது கூட்டத்தினர் நினைத்ததை கருத்தில் கொண்டு கலைஞர் அப்படி பேசினாரா என்பதற்கு ஒரு பட்டிமண்டபமே நடத்தலாம்.