பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

என் பார்வையில் கலைஞர்


விட்டது. தாங்கள் நேசிக்கும் பெண்களுக்கு அவர்கள் பெயரில் நான் காதல் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இளைஞனும் விடுக்கும் வேண்டுகோள். நான் உடனடியாக மசிய மாட்டேன். என்னிடம் காதல் கடிதம் பெற நினைக்கும் ஒரு இளைஞன் எங்கள் ஊரில் இருந்து எட்டு மைல் தொலைவில் உள்ள குற்றாலத்திற்கு என்னை சைக்கிளில் ஏற்றிச் செல்ல வேண்டும். குற்றால அருவி வெள்ளத்தில் எனது டவுசரையும், சட்டைகளையும் சோப்பு போட்டு துவைத்து தரவேண்டும். திரும்புகிற வழியில் தென்காசியில் ஒரு அய்யரம்மா வீட்டளவில் நடத்திய விடுதியில் சாப்பாடு வாங்கித் தர வேண்டும். சாப்பாடு நாலணா. நிறைவாக இருக்கும். பிறகு தென்காசி பரதன் தியேட்டரில் சினிமாவுக்கு கூட்டிப் போக வேண்டும். வருகிற வழியில் பாவூர்சத்திரம் என்ற இடத்தில் ஒரு டீயும், இரண்டு மசால் வடையும் வாங்கித் தரவேண்டும்.

இப்படி ஒரு தடவை என்னைக் கவனித்தால்தான், நான் காதல் கடிதங்கள் எழுதுவது பற்றி யோசிப்பேன். சம்பந்தப்பட்ட பெண்ணின் உடையழகு, உருவ அழகு, நடையழகு, சொல்லழகு போன்றவற்றை மிகைப்படுத்தி அசிங்கமான தோற்றங்களை எடிட் செய்து ‘கண்ணே, கற்பூரமே, கஸ்தூரி பெட்டகமே, தேவகுல பெண்ணே, நாவல் பழ நிறத்தாளே’ என்று மனதில் உருவாகும் வார்த்தைகளை எல்லாம் ஒன்று திரட்டி கடிதமாக்கி, கொடுத்து விடுவேன். வீட்டில் பெற்றோரிடமும் அண்ணன் தம்பியிடமும் நாயே பேயே என்றும் கவுகண்ணி, மஞ்ச கடஞ்சாள், ஆமை, எருமைமாடு போன்ற பட்டங்களை சுமக்க முடியாமல் சுமக்கும் இளம் பெண்களுக்கு இத்தகைய கடிதங்கள் வரப்பிரசாதமாகவும், வடிகாலாகவும் அமைந்திருக்கும். இந்தக் கடிதங்களை அவர்கள் எழுத்துக் கூட்டிப் படிப்பார்கள். கடிதம் கிடைத்த மூன்று நாட்களிலேயே புளியந்தோப்பில் சந்தித்துக் கொள்வார்கள். ஆணும் பெண்ணும் நிலம் பார்த்தும், குலம் பார்த்தும் காதலித்ததால் பிரச்சனை அதிகமாகவில்லை. சில இளைஞர்கள் கையோடு பிடிபட்டு அடிபட்டு இருக்கிறார்கள். இவர்களை அப்படி அடித்த சம்பந்தபட்ட பெண்ணின் சகோதரர்களுக்கு நான்தான் காதல் கடிதங்களை எழுதி கொடுத்தவன் என்பது தெரியும். ஆனாலும் என் கிட்டே வரமாட்டார்கள்.

கல்லூரி விடுமுறையில் கிராமத்திற்குச் சென்ற நான் கலைஞர் பாணியில் எழுதிய ஒரு நாடகத்தில் கதாநாயகனாகவும்

1