பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கலைஞர் பேசுகிறார்

(சு.சமுத்திரம் எழுதிய நூல்களை வெளியிட்டு 26.7.96 அன்று கலைஞர் ஆற்றிய உரை)

இந்த நிகழ்ச்சியைக் காணும்போதும், கலந்து கொண்டு இருப்பதை நினைக்கும்போதும், இந்த விழாவைப்பற்றி கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே, தரு நிழலே, நிழல் தந்த சுகமே என்று நான் வர்ணிக்க வேண்டியது இருக்கிறது. காலையிலிருந்து கடும் பணிகள் பலவற்றை ஆற்றிவிட்டு, மாலையிலும் கடும் பணிகளை எதிர் கொண்டுவிட்டு, இங்கே இந்த இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்கிற நேரத்தில் இது கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர் தருவாக, தருநிழலாக, நிழல் தரும் சுகமாக இருக்கிறது என்பதை நினைத்து, நினைத்ததை நெஞ்சிலே பதித்து, பதித்ததை உங்களிடத்திலே நான் பகிர்ந்து கொள்கின்றேன்.

சமுத்திரமே நம்பக்கம்

நம்முடைய அன்புக்கும், பண்புக்கும் உரிய அருமைத் தோழர் சமுத்திரம் அவர்களுடைய மூன்று நூல்கள், இன்று உங்களுடைய அன்பார்ந்த முன்னிலையில் வெளியிடப்பட்டு இருக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நான் ஒரு தண்ணீர் தேசத்திற்கு போயிருந்தேன். (பலத்த சிரிப்பு ) கவியரசு வைரமுத்துவின் தண்ணீர் தேசம். அதுவும் சமுத்திரத்திலே நடைபெற்ற கதை. சமுத்திரம் கதைக்கும் இன்றைக்கு வந்திருக்கிறேன். எனவே கருணாநிதி ஆட்சிக்கு வந்தால், தண்ணீரே கிடைக்காது என்ற சாபத்திற்கு இடையில், தண்ணீர் தேசமே உருவாகிறது என்ற அளவில், தண்ணீர் தேசமென்ன? சமுத்திரமே உன் பக்கம் இருக்கிறது என்ற அளவில் இந்த நிகழ்ச்சி இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. (பலத்த கைதட்டல்)

நண்பர் நடராசன், இந்த நிகழ்ச்சியில் ஒரு வேண்டுகோளை விடுத்து, என்னுடைய சிறுகதை ஒன்றை நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது பெற்று, வானொலியிலே ஒலிபரப்பிய நிகழ்ச்சியை குறிப்பிட்டார். எனக்கு பசுமையான நினைவுகள். அப்போது அவர் என்னிடத்திலே அந்த சிறுகதையைப் பெற்று திருச்சி வானொலியிலே வெளியிட்டது. 1967க்கு பிறகு. நான் அண்ணா தலைமையில் பொதுப் பணித் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்த காலக்கட்டத்தில்.