பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

என் பார்வையில் கலைஞர்


செளடேக்கர் மகளின் திருமணநாள் வந்தது. மாலையில் வரவேற்பு. ஏராளமான சினிமா தயாரிப்பாளர்கள், தொழிலதிபர்கள், நடிகநடிகையர்கள், அரசு அதிகாரிகள் என்று கண்கொள்ளாக் கூட்டம். திடீரென்று கூட்டத்தில் ஒரு பரபரப்பு. கலைஞர் வந்து கொண்டிருக்கிறார். அப்போதுதான் நான் அவரை முதல் தடவையாக நேருக்குநேர் பார்க்கிறேன். அவர் முகத்தில் ஒரு சின்னச் சிரிப்பு.

நான், அப்போதைக்கு கலைஞர் மயமாகி விட்டேன்.

இந்தக் கட்டத்தில் கலைஞருக்கு ஏற்பட்ட ஒரு வன்முறை எனக்கு ஏற்பட்டதாக துடித்துப் போனேன்.

பிரதமர் இந்திராகாந்தியுடன் கலைஞர் கூட்டணி வைத்திருந்த காலம். அவர் சென்னைக்கு வந்திருந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரும், கூட்டணி சகா கலைஞரும் விமான நிலையத்திற்குச் சென்றார்கள். விமானம் தரையிறங்கியதும் எம். ஜி. ஆர் விமானத்திற்கு அருகே போயிருந்தார். இந்த இடத்திற்கு முக்கியமான தலைவர்களைத்தான் அனுப்புவார்கள். கலைஞரும் விமானத்திற்கு அருகே போக முற்பட்டபோது அப்போதைய துணை போலீஸ் கமிசனர் ஒருவர் கலைஞரின் கையைப் பிடித்து போகக்கூடாது என்பது போல் இழுத்தார். இதைப் பார்த்து பத்திரிகையாளர்களான எங்களில் ஒரு சிலர் கூச்சலிட்டோம். முதல்வர், இந்திரா காந்தியோடும் திரும்பி வந்தார். கலைஞர் அவரிடம் தனக்கு ஏற்பட்ட வன்முறையை விளக்குவது போல் இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆர் கண்டு கொள்ளவில்லை. இருவரும் இடம் மாறி இருந்தால், கலைஞர் எம் ஜி ஆரை அவமதித்த அந்த அதிகாரியை அங்கேயே அவரிடம் மன்னிப்புக் கேட்கச் செய்திருப்பார்.

காரணம், இது தமிழன் பண்பாடு.