பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

67


கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அவரோடு பல, இடங்களுக்கு மாலை மரியாதைகளோடு சென்ற இந்த அம்மையார், பாதிக்கப்பட்ட கலைஞரின் துணைவியாராய் அவர் கண்களில் தோன்றிய கலக்கமும், வார்த்தைகளை உருவாக்கிய மெல்லிய குரலும் இன்னும் என் மனதை விட்டு நீங்கவில்லை. எனது சந்திப்பு, அந்த அம்மாவிற்கு ஆயிரத்தெட்டு நிகழ்ச்சிகளில் ஒன்று. நிச்சயம் அவர் மறந்திருப்பார். ஆனால், என்னால் இன்றுவரை அந்த நிகழ்ச்சியை, அவரது துயரமான முகபாவத்தை மறக்க முடியவில்லை .

தயாளு அம்மாவை பார்த்து விட்டு, பெங்களூர் திரும்பிய நான் சண்முகசுந்தரம் அவர்களிடம், முதல்வர் எம். ஜி. ஆர் கலைஞரை அடாவடியாக வீட்டிலேயே கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை குறிப்பிட்டேன். அவரும் இதர தமிழர்களும் கொதித்துப் போனார்கள். ‘நம்ம தமிழனுக்கு புத்தி இல்லையே’ என்று நொந்து கொண்டார்கள்.

தயாளு அம்மாவை சந்தித்த மூன்று மாத காலத்திற்குள் கலைஞரை சந்திக்கச் சென்றேன். அப்போது அறிவாலயம் இல்லை . தி.மு.க. தலைமை அலுவலகமான அன்பாலயம் இதற்கு அருகே மறுமுனையில் உள்ள இடத்தில் இருந்தது. அந்த அலுவலகத்தின் வரவேற்பு அறையில், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் சட்டமன்ற உறுப்பினருமான சா. கணேசன் ‘பி.ஏ.வாக’ உட்கார்ந்திருந்தார். இதற்கு முன்பே, இவர் எனக்கு பழக்கம். அன்பு பொங்கும் முகம். உரத்துப் பேசாத மென்மை. பார்த்த உடனேயே நேசிக்க தோன்றும் முகபாவம். ஆக மொத்தத்தில் எளிமையின் உருவம். என்னை அன்புடன் வரவேற்றார். கலைஞரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். நான் சொன்ன தோரணையில் கலைஞருக்கும் எனக்கும் நீண்டகால பழக்கம் இருக்கிறதாக நினைத்தாரோ என்னவோ.. ஒரு வேளை, எழுத்தாளர் ஒருவர் எப்போது வேண்டும் என்றாலும் தன்னை பார்ப்பதை கலைஞர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்றும் நினைத்திருக்கலாம். ‘உங்களுக்கென்ன தடையா போடுவார்? தராளமாகப் போங்க’ என்றார்.

நான் மாடிப்படியேறி கலைஞரின் அறைக்குச் சென்றேன். கலைஞருடன் பேராசிரியரும் கட்சியின் பொருளாளரான சாதிக் பாட்சா அவர்களும் உடனிருந்தார்கள். பேராசிரியரையும்,