பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

77


எழுதிய கடிதத்தை கைப்பற்றி, பேரவைத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்தது நினைவிருக்கலாம். அன்றிரவு சுமார் ஒரு மணியளவில் நடராசனும், தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியும் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள்.

ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகுவதாக வெளியிட்ட அந்த கடிதத்துடன் கூடிய அறிக்கையை அவர் விலக்கிக் கொண்டார் என்றார்கள். அதாவது அரசியலில் தொடர்ந்து நீடிப்பார் என்று பொருள். இந்தப் புதிய தகவலை நான் வானொலியில் ‘ஸ்கூப்’ என்பார்களே அப்படிப்பட்ட சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டேன். காலையில் வெளியான எல்லா நாளிதழ்களும் ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகிவிட்டதாக மிகப் பெரிய பேனர்களோடு செய்திகளை வெளியிட்ட போது, சென்னை வானொலி மட்டுமே அவர் வாபஸ் வாங்கி தொடர்ந்து அரசியலில் ஈடுபடத் தீர்மானித்திருக்கிறார் என்ற செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.

டில்லி மேலிடத்தின் ஆணைப்படி நான் ஜெயலலிதாவின் வீட்டிற்கு சென்று மேற்கொண்டு நடந்தவற்றை ஆங்கிலச் செய்தியாக்கினேன். எனக்கு கிட்டத்தட்ட கதாநாயக வரவேற்புதான்.

இந்த விவகாரம் முதல்வர் கலைஞருக்கு உளவுச் செய்தியாக போயிருக்கும். சென்னைக் கோட்டையில், அவரது அலுவலகத்தில் நானும் ஒரு சில செய்தியாளர்களும் அவரை நண்பகலில் சந்தித்தோம். என்னைப் பார்த்ததும் கலைஞர் முகத்தில் ஒரு கோபச்சலனம். இதரச் செய்தியாளர்களைப் பார்த்து ரெய்டுக்கும் தனக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டு ஆப் - தி - ரெக்கார்டாக சில விவரங்களைச் சொன்னார். இதனுடைய விளைவுதான் அந்த கடிதம் என்றார். ஆனால், அதை கைப்பற்றும் ரெய்டுக்கு தான் காரணமில்லை என்றார். ஒருவேளை அவருக்குத் தெரியமாமேல அதிகாரிகள் சபாஷ் பட்டம் வாங்குவதற்காக அப்படிச் செய்திருக்கலாம். ஆனால், முக்கால்வாசி , கலைஞருக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது. பல்லாண்டு காலமாக பொறுமையைக் கடைபிடித்த கலைஞர், இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு விட்டார் என்றே சொல்லலாம். அதன் விளைவுகள்தான் இன்றும் நம்மை பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றன.